பீகாரில் மார்ச் 3-ந்தேதி பா.ஜனதா பேரணி

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      அரசியல்
bjp 2018 12 16

புதுடெல்லி, வட மாநிலங்களில் தீவிர பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி மார்ச் 3-ந்தேதி பீகார் மாநிலத்துக்கு செல்ல உள்ளார். அன்றைய தினம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜனதாவும், காங்கிரசும் பிரசாரத்தை தொடங்கி விட்டன.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆதரவு திரட்ட தொடங்கி விட்டார். அவர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10 மற்றும் 19-ந்தேதி தமிழகம் வந்து பிரசாரம் செய்ய உள்ளார்.அடுத்த மாதம் முழுவதும் வட மாநிலங்களில் தீவிர பிரசாரம் செய்யும் மோடி மார்ச் 3-ந்தேதி பீகார் மாநிலத்துக்கு செல்ல உள்ளார். அன்றைய தினம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். அவருடன் பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அந்த மேடையில் ஒரே நேரத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், லோக் ஜன்சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அந்த மேடையில் பேச உள்ளனர்.பீகாரில் பிரதமர் மோடியும், முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் ஒன்று சேர்ந்து ஆதரவு திரட்டும் பொதுக்கூட்டம் என்பதால் பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் அனைத்து தொண்டர்களையும் திரட்ட முடிவு செய்துள்ளனர். அந்த கூட்டத்தில் 5 லட்சம் பேர் திரள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்திற்காக பீகார் மாநிலம் முழுவதிலும் இருந்து தலைநகர் பாட்னாவுக்கு சிறப்பு ரெயில்கள் மற்றும் வாகனங்களை இயக்குவதற்கு இப்போதே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.இந்த பொதுக்கூட்டம் பீகார் மாநில மக்களை பா.ஜனதா பக்கம் இழுக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.இதற்கிடையே பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு முன்பாக பல தடவை சென்று பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். தலைநகர் பாட்னாவில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.இந்த கூட்டத்திற்கு ஜன் அகன்சா பேரணி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேரணி மூலம் பீகாரில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்ட முடியும் என்று ராகுல் நம்புகிறார்.

பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று ராகுல் இலக்கு நிர்ணயித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து