முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் வளர்ச்சியில் தமிழகம் பீடுநடை போடுகிறது - முதல்வர் எடப்பாடி பெருமிதம்

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தொழில் வளர்ச்சியில் தமிழகம் பீடு நடைபோடுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டு கூடுதலாக 56 சதவிகிதம் வந்துள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தொழில் முதலீட்டுக்கு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு 6-ம் இடத்தில் இருந்தது. இப்போது அது 2-ம் இடத்துக்கு வந்துள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

சாதகமான சூழ்நிலை...

ஸ்ரீபெரும்புதூர் அருகே செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் 3-வது மிதவை கண்ணாடி ஆலையையும், மற்றும் 2 தொழிற்சாலைகளையும் முதல்வர் துவக்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

தொழில்நுட்ப அனுபவத்துடன் கூடிய மனித வளம், தடையில்லா மின்சாரம், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், சிறப்பான சட்ட ஒழுங்கு பராமரிப்பு, வெளிப்படையான மற்றும் எளிமையான அணுகுமுறை போன்ற தொழில் தொடங்கத் தேவையான அனைத்து சாதகமான சூழ்நிலைகள் அம்மாவின் அரசால் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தியை பெருக்கி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த தேர்விடமாக உருவாக்கவும், அம்மாவின் அரசு ஆக்கபூர்வமான கொள்கைகளை வெளியிடுதல், திட்டமிடுதல் மற்றும் அத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

30 நாட்களுக்குள் அனுமதி

முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு, 30 நாட்களுக்குள் ஒற்றைச்சாளர முறையில் வேண்டிய அனுமதிகள் வழங்கப்படுவதை 2018-ம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் உறுதி செய்கிறது. 30 நாட்களுக்கு மேலாகும் பட்சத்தில், தானாகவே அனுமதி வழங்கப்பட்டதாக கருதப்படும் ஷரத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் புதிய தொழில் தொடங்க தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை சமீபத்தில் அம்மாவின் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

2 வது பெரிய பொருளாதார மாநிலம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒரு முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து ரிசர்வ் வங்கி சமர்ப்பித்த அறிக்கையில் தமிழ்நாட்டில் 2017-18ம் ஆண்டில் கூடுதலாக 56 சதவீதம் முதலீடு பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டிற்கு சிறந்த மாநிலமாக சென்ற ஆண்டு ஆறாம் இடத்தில் இருந்து, 2018ம் ஆண்டில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பீடுநடை போடுகிறது என்பதை இந்த அறிக்கைகள் உறுதி செய்கின்றன.

தொழில் முதலீட்டாளர் மாநாடு வெற்றி

சென்ற வாரம் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அம்மாவின் அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்பதை இங்கே பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகிறேன். இதன் காரணமாக, இன்றைய தினம் 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகளும், சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செயின்ட் கோபைன் நிறுவனம் 1665ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக கண்ணாடி தொழில்நுட்பத்தில் தொடர்ந்து உலகளவில் ஓர் சிறந்த முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது.“The Customer is King” அதாவது, வாடிக்கையாளரே மன்னர்” என்ற கூற்று செயின்ட் கோபைன் நிறுவனத்திற்கு மிகப் பொருத்தமாக உள்ளது.

இதுவரை ரூ.3,400 கோடி முதலீடு

செயின்ட் கோபைன் நிறுவனம் தமிழ்நாட்டுடன் இதுவரை நான்கு ஒப்பந்தங்களில் பல்வேறு கட்டங்களில் கையொப்பமிட்டு, அதன்மூலம் இதுவரை 3,400 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் தனது மூன்றாவது மிதவை கண்ணாடி தொழிற்சாலையை 800 கோடி ரூபாய் முதலீட்டில் 5 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு, அம்மாவின் அரசின் ஒத்துழைப்புடன் மூன்றாண்டு காலத்திற்குள்ளேயே அந்த தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இதனை நான் இன்று (நேற்று) துவக்கி வைத்துள்ளேன்.

மழை நீர் சேகரிப்பு

அம்மாவின் ஆணையை ஏற்று இந்த நிறுவனம் இயற்கை வளம் காத்தல், மழைநீர் சேகரிப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தியதை அம்மா அந்த நிகழ்ச்சியில் பாராட்டினார். மேலும், செயிண்ட் கோபைன் நிறுவனம் வளர்ச்சியடைய பலவித ஆலோசனைகளையும் அந்நிகழ்ச்சியில் வழங்கினார் என்பது, நமது அம்மா தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறையை தெளிவாக காட்டுகின்றது. சென்னை தரமணியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 110 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுரஅடி பரப்பில் அமைந்துள்ள செயிண்ட் கோபைன் ஆராய்ச்சி (இந்தியா) மையத்தை அம்மா 29.1.2016 அன்று துவக்கி வைத்தார் என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

பன்னாட்டு முதலீடுகள் தமிழகத்தில் அதிகம்

மேலும், இந்த நிறுவனம் தனது பன்னாட்டு முதலீடுகளில் அதிக அளவில் தமிழ்நாட்டில் தான் செய்துள்ளது என்பதை அறிவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற வாரம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், மேலும் 720 கோடி ரூபாயினை தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தில் செயிண்ட் கோபைன் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது என்பதை அறிவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அம்மாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை எவ்வாறு இந்நிறுவனம் செயல்படுத்தியதோ, அதே போன்று, தற்போது அம்மாவின் அரசு 1.1.2019 முதல் அறிவித்திருக்கிற பிளாஸ்டிக் தடை அறிவிப்பினையும் முழுமையாக செயல்படுத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து