முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழக ஆட்சியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களைப் போன்று தி.மு.க. ஆட்சியில் கொண்டு வர முடிந்ததா? ஸ்டாலினுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சாட்டையடி

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -கழக ஆட்சியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களைப் போன்று தி.மு.க. ஆட்சியில் கொண்டு வர முடிந்ததா?
என ஸ்டாலினுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சாட்டையடி கொடுத்து பேசினார்.
திண்டுக்கல்லில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் விழா கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும் மாநகராட்சி முதல் மேயருமான வி.மருதராஜ் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர் ஜெயசீலன், மாவட்ட பேரவை செயலாளர் வி.டி.ராஜன். அபிராமி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான பாரதிமுருகன் ஆகியோர் வரவேற்றனர். தலைமைக்கழக பேச்சாளர் நடிகை வாசுகி, பேட்ரிக் வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில், புரட்சித் தலைவி அம்மா மறைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. அவரது மறைவிற்குப் பின்னர் கழகத்திற்கும் ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அரசியல் இடையூறு செய்தனர். கட்சியை பிளவுபடுத்த பார்த்தனர். ஆனால் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதனை முறியடித்து சீரும் சிறப்புமாக அம்மா வழியில் ஆட்சி புரிந்து வருகின்றனர்.
6 மாதத்தில் கழக ஆட்சி கலைந்து விடும் என டி.டி.வி. தினகரன் கூறினார். அம்மா மறைவிற்குப் பின் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி விடலாம் என நினைத்தார். மேலும் பொதுச் செயலாளர் பதவியையும் கைப்பற்ற நினைத்தார். ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேற வில்லை. தாங்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து இரட்டை இலை சின்னத்தையும் முடக்கப் பார்த்தனர். குக்கர் சின்னம் எதிர்பார்த்தனர். அதுவும் கிடைக்க வில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன நிலையாக அக்கட்சி உள்ளது. முற்றிலும் செயல்படாத நிலையில் அக்கட்சி உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு அ.தி.மு.க. தயாராக இருந்தது. ஆனால் தி.மு.க. நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கியது. உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் சிறு சிறு அடிப்படை வசதிகளை உள்ளாட்சி பிரதிநிதிகளே செய்து முடித்திருப்பர். மாறாக எம்.எல்.ஏ.க்களும் எம்.பிக்களும் அமைச்சர்களும் தான் அந்த சிறு சிறு பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் போனதற்கு தி.மு.க.வே காரணம்.
கூட்டுறவு தேர்தல் வர இருந்தது. அதற்கும் தடை உத்தரவு வாங்கி விட்டனர். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என ஸ்டாலின் முன்மொழிந்தார். ஆனால் பல கட்சி தலைவர்கள் அதற்கு உடன்பட வில்லை. மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மம்தா பானர்ஜி கல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ராகுல் காந்தியை பற்றி பேசவே இல்லை. அங்கு வங்காள மொழியில் பேசி மக்களை கவர்ந்து விடலாம் என அவர் நினைத்தது செல்லாக்காசாகி விட்டது. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்காக லோக் ஆயுக்தா சட்டத்தை கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்டு வந்தனர். இதற்கான நீதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக ஸ்டாலினை அழைத்த போது அவர் ஏன் கலந்து கொள்ள வில்லை. கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது 25க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை கற்பழிப்பு வழக்குகள் உள்ளது. பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள் அவர்கள்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒற்றைக்கண் சிவராசன் படத்தை அம்மாவுடன் இருப்பது போல் கருணாநிதி வெளியிட்டார். அதனை சட்டமன்றத்தில் அம்மா துகிலுரித்து காட்டிய போது கருணாநிதி மன்னிப்பு கேட்கவில்லை. அவர் வழியில் வந்த ஸ்டாலினும் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். சாதிக்பாட்சா, அண்ணா நகர் ரமேஷ் கொலைவழக்கு என்ன ஆனது. சி.பி.ஐ. விசாரணைக்கு தயாரா? கருணாநிதியும் தி.மு.க.வும் விஷ ஜந்து என தமிழக மக்கள் ஏற்கனவே திட்டவட்டமாக முடிவு செய்து விட்டனர். இவர்கள் என்ன கூறினாலும் அதனை தமிழக மக்கள் ஏற்கப் போவதில்லை.
ஸ்டாலின் முன்னர் நமக்கு நாமே என நடைபயணம் செய்தார். இப்போது கிராமசபைக் கூட்டம் நடத்துகிறார். இவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது மக்களை சந்தித்தாரா? குறைகளை கேட்டாரா? கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1000 பணம் வழங்கினர். இது மக்கள் மனதில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தி.மு.க.வினரும் கூட மகிழ்வுடன் அப்பணத்தை வாங்கி சென்றனர். மக்களின் வரிப்பணம் மக்களுக்கே திரும்பி வழங்கி உள்ளோம். தி.மு.க. ஆட்சியில் ஏன் பொங்கல் பரிசு வழங்கப்பட வில்லை. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு 3 லட்சத்து 44 ஆயிரம் கோடி முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து வந்திருந்த முதலீட்டாளர்கள் இம்மாநாட்டைக் கண்டு தமிழக முதல்வரையும், துணை முதல்வரையும் பாராட்டினர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடும் தொழில் தொடங்குவதற்கு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என பாராட்டி சென்றார். தி.மு.க ஆட்சியில் இத்திட்டத்தை கொண்டு வர முடிந்ததா? அம்மா உணவகத்தின் மூலம் குறைந்த செலவில் நிறைவான சாப்பாடு வழங்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா?
கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மகப்பேறு பிரசவத்தின் போது அம்மா ரூ.6 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கி அதனை ரூ.12 ஆயிரமாக உயர்த்தினார். தற்போது கழக அரசு ரூ.18 ஆயிரமாக வழங்கி வருகிறது. அதோடு ரூ.1000 மதிப்பிலான பரிசு பெட்டகமும் வழங்கப்படுகிறது. பிரசவம் முடிந்தவுடன் வீடு திரும்புவதற்கு ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசாக வேட்டி சேலை, ரூ.484 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. கட்சி பாகுபாடின்றி இது அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 100 யூனிட் மின்சாரம் இலவசம் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர். இதுபோன்று எண்ணற்ற நலத்திட்டங்களை கழக அரசு அமல்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாகவும் முன்னோடி மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.
ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மா முயற்சியின் காரணமாக பிரதமர் மோடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது மதுரையில் ரூ.2600கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கழக ஆட்சியினால் எண்ணற்ற நலத்திட்டங்களை பெற்று மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நல் ஆட்சிக்கு தமிழக மக்கள் பேராதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திவான்பாட்சா, இணை செயலாளர் ராஜேந்திரன், அரசு வழக்கறிஞர் மனோகரன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பழனிசாமி, அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், கொடைக்கானல் நகர செயலாளர் ஸ்ரீதர், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ராமராசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து