முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தவறான தகவலை பரப்புகின்றனர் - தமிழக அரசு விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பு தவறான தகவலை பரப்புவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதுகுறித்து விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில்,

பங்களிப்பு ஓய்வுதியத் திட்ட நிதி பராமரிப்பு பற்றி பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அது பற்றிய உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமாகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை  2003ல் நடைமுறைக்கு கொண்டுவந்த பின்பு அத்திட்டப்படி  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு  ஈடாக 10 சதவீதம் தொகையை அரசு வழங்கி வருகிறது.  இத்திட்டப்படி இந்தத் தொகைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை நிறுவனத்திற்கு மாற்றம் செய்ய முடிவெடுக்காத நிலையில் இந்த நிதி தனி பொதுக் கணக்கில் இருப்பு வைத்து   பராமரிக்கப்படுகிறது. 

ரூ.2,115.47 கோடி கூடுதல்...

இந்த நிதி அவ்வப்போது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.  சேமநல வைப்பு நிதி வட்டிவீதத்தின்படி வட்டியைக் கணக்கிட்டு, அத்தொகைக்கும் டிரெசரி பில்-லில் கிடைக்கும் வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மாநில அரசே பொறுப்பேற்று அதை கருவூல பத்திர முதலீட்டில் கிடைக்கும் வட்டியுடன் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படுகிறது.  இவ்வகையில் அரசு 2017-18 வரை 2,115.47 கோடி ரூபாய் கூடுதல் வட்டியை அரசு வழங்கியுள்ளது.  இந்த நிதியில் உரியவாறு ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புத் தெகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுகிறது.

முறையாக பராமரிப்பு...

கடந்த 31.3.2018 வரை இந்த நிதியில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு 8,283.97 கோடி ரூபாயுடன் அரசின் பங்களிப்பாகப் பெறப்பட்ட 8,283.97 கோடி ரூபாயும், பெறப்பட்ட வட்டியாக 5,252.90 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 21,820.90  கோடி ரூபாய்  பொதுக் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது.  நடப்பு ஆண்டிலும் பெறப்படும் பங்களிப்புத் தொகை முறையாக வரவு வைக்கப்படுவதுடன் ஆண்டின் இறுதியில் அதற்கான வட்டியும்  கணக்கிடப்பட்டு அதுவும் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படும்.

இணைய தளம் மூலம்...

ஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியரின் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை எவ்வளவு, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை எவ்வளவு, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு என்பதை முறையாக அரசு தகவல் தொகுப்பு விபர மையம் மூலம் கணக்கிட்டு கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.  அதன் விபரத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் http://cps.tn.gov.in/public இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி தனி பொதுக் கணக்கில் வட்டியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே பிடித்தம் செய்யப்பட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுவதுடன் அதற்கான வட்டி,  சேமநல நிதிக்கு தற்போது கிடைக்கும் வட்டி அளவான 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து