முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘பிரெக்ஸிட்’ - ஐரோப்பிய யூனியனிடம் மறுபேச்சுவார்த்தை நடத்த இங்கி. முடிவு

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

லண்டன், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக 2016-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்கள் இதற்கு ஆதரவு அளித்தனர். இங்கிலாந்து முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தீவிரப்படுத்தினார். ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கான ஒப்புதலை பெற்றார்.

ஆனால் இந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 15-ந் தேதி நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பிரதமர் தெரசா மே வரலாறு காணாத தோல்வியை சந்தித்தார். இதனால் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் தெரசா மேயின் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. எனினும் 19 ஓட்டுகள் வித்தியாசத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்றுப்போனதால் தெரசா மே அரசு தப்பியது.

இந்த நிலையில் ஒப்பந்தம் ஏதும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். அதன் மீது செவ்வாய்க்கிழமை ஓட்டெடுப்பு நடந்தது. இதற்கு ஆதரவாக 310 ஓட்டுகளும், எதிராக 318 ஓட்டுகளும் விழுந்தன. இதனால் தெரசா மே முன்மொழிந்த திட்டம் தோல்வியை தழுவியது.அதனை தொடர்ந்து ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தெரசா மே, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக ஓட்டெடுப்பு நடந்தது.

இதில் மறுபேச்சுவார்த்தைக்கு ஆதரவாக 317 ஓட்டுகளும், எதிராக 301 ஓட்டுகளும் பதிவாகின. ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் மறுபேச்சுவார்த்தை நடத்த வேண்டியது கட்டாயமாகி உள்ளது.‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு மார்ச் 29-ந் தேதி முடிவடையும் நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க தெரசா மே ஆயத்தமாகி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து