முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி, பாராளுமன்றத்தில்  நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் தனிநபர் வருமானவரி விலக்குகான உச்சவரம்பை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு உதவித்தொகை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இடைக்கால பட்ஜெட்

வரும் ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் முழு பட்ஜெட் அல்ல, இடைக்கால பட்ஜெட் என அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட் தாக்கல்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்நிலையில் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று லோக்சபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

10 அமர்வுகளாக...

பட்ஜெட் உரையில், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நிதி அமைச்சர் பதவி வகித்த அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கிறார். இதன் காரணமாக நிதித்துறை பொறுப்பு, ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சருமான பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டு, அவர் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தம் 10 அமர்வுகளாக நடைபெற உள்ளது. 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை கேள்வி நேரம் நடைபெற உள்ளது. 8-ம் தேதி தனிநபர் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. பாராளுமன்றத்தில் கடைசி இடைக்கால பட்ஜெட், 2014ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்டது.

வருமான வரி விலக்கு....

நாட்டில் தற்போது ரூ.2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. ரூ.2.5 முதல்  ரூ.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு 5 சதவீத வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்க்கு 30 சதவீத வரியும் தற்போது விதிக்கப்பட்டு வருகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக அதிகரித்துள்ளது. நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3 கோடி நடுத்தர மக்கள் பலன் அடைவார்கள். அந்த அறிவிப்பை கேட்டதும் பிரதமர் மோடி மற்றும்  பா.ஜ.க., எம்.பி.க்கள் மேசைகளை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

எதிர்பார்ப்பு நிறைவேறியது...

சமீப ஆண்டுகளாக வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவே இல்லை. வருமான வரி செலுத்துகிற சம்பளதாரர்களை ஈர்க்கிற விதத்தில் தற்போதைய வருமான வரிவிலக்கு உச்சவரம்பான ரூ.2.5 லட்சம் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்த நிலையில், பா.ஜ.க .அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பு நேற்று நிறைவேறியது.

வரி வருவாய் அதிகரிப்பு

பாஜக ஆட்சியில் வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. வருமான வரித்துறையை மக்கள் எளிதில் அணுகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. முறையால் வரி வருவாய் அதிகரித்துள்ளது.

ரூ.50 ஆயிரம் கோடி...

1.5 கோடி வீடுகள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாகும். மலிவு விலையில் எல்.இ.டி. பல்புகளை வழங்கியதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு தேவைப்பட்டால் இன்னும் நிதி ஒதுக்கப்படும். நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிராமங்களிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதார விலை உயர்வு...

விலைவாசியை கட்டுப்படுத்தியிருக்காவிடில் குடும்பங்கள் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். ஏழை,எளிய மக்களுக்கு 143 கோடி எல்.இ.டி. பல்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. 22 விவசாய பொருட்களின் ஆதார விலை 50 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரியானாவில் நாட்டின் 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம்

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் வழங்கப்படும். இந்த பணம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். விவசாயிகளுக்கான உதவித்தொகை வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.75,000 கோடி கூடுதல் செலவாகும். நிதி வழங்கப்படுவதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து