முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற கருத்துகளை பேசி வருகிறார் ஸ்டாலின்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சேலம், காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற கருத்துகளை மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கையில் தெரிவித்தார்.

சேலம் அஸ்தம்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி: மத்திய அரசு இன்றைக்கு தாக்கல் செய்திருக்கின்ற பட்ஜெட் தொடர்பாக...
பதில்: மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது.  அந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கின்றார்கள்.  குறிப்பாக, சிறுகுறு விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்ப, கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பசு வளர்ப்புத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றார்கள்.  ஏழைகளுக்கு உணவு வழங்குகின்ற திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.  இதெல்லாம் ஏழைகளுக்கு கிடைக்கப் பெற்ற மிகப்பெரிய நன்மை என்று நான் கருதுகின்றேன்.

கேள்வி: பல கட்சிகள், இது தேர்தலுக்கான அறிவிப்பு என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள்...
பதில்: மக்களுக்கு நன்மை செய்வதுதான் அரசினுடைய கடமை. அந்த அடிப்படையிலே மத்திய அரசு, குறிப்பாக, ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது.  திட்டத்தை அறிவித்தால், அதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள், தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட அறிவிப்பு என்று சொல்கிறார்கள், அறிவிக்காவிட்டால், இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை, உப்பும் இல்லை, சத்தும் இல்லை என்று சொல்கிறார்கள். ஆகவே, ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கின்றபொழுது, மக்களுக்குத் தேவையான திட்டங்களை வழங்கும் என்று எதிர்பார்த்துதான் மக்கள் அந்த அரசை தேர்ந்தெடுக்கின்றார்கள். அந்த அடிப்படையிலே மத்திய அரசு, மக்களுக்குத் தேவையான திட்டங்களை இப்பொழுது அறிவித்திருக்கிறது. வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சமாக அறிவித்திருக்கின்றார்கள். அது, வேலைக்குச் செல்கின்றவர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

கேள்வி: விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்யவேண்டுமென்று பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள், ஆனால் அந்த கடனை தள்ளுபடி செய்வதற்கும், புதிய கடன் தொடர்பாக இதில் எந்த அறிவிப்புமே இல்லையே ?
பதில்: தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், விவசாயிகளுக்கு அம்மா இருக்கின்றபோழுதே, சிறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.  விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க் கடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  பயிர்க்கடன் வட்டியில்லா கடனும் வழங்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் டெல்டா பாசன விவசாயிகளுக்கு இன்னும் கூடுதலான சலுகை செய்யப்படுகிறது. நடவு மானியம், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம், சம்பா தொகுப்புத் திட்டம் போன்றவையெல்லாம் கொடுத்திருக்கிறோம்.  தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை அம்மாவினுடைய அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

கேள்வி: மத்திய அரசில் இந்த கடன் தள்ளுபடி இல்லையென்ற ஒரு குற்றச்சாட்டை விவசாயிகள் முன்வைக்கிறார்களே?
பதில்: மத்திய அரசு வேறு, மாநில அரசு வேறு. அது தேசிய அரசு.  பல்வேறு மாநிலங்களுடைய நிலையில் இருந்து தான் அறிவிப்பார்கள்.  நம்முடைய மாநிலத்தில் இருக்கும் பிரச்சினையைத் தான் நான் பேச முடியும்.

கேள்வி: தமிழக அரசின் அடுத்து வரும் இந்த பட்ஜெட் இதுபோன்ற ஒரு கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக அமையுமா?
பதில்: பட்ஜெட்டில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதெப்படி பட்ஜெட்டில் இருப்பதை முன்கூட்டியே நாம் சொல்ல முடியும்?

கேள்வி: தொழில் முனைவோர் மாநாடு நடத்தினீர்களே, எவ்வளவு நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது?
பதில்: அம்மா 2015-ல், தமிழகம் இந்தியாவிலேயே தொழில் துவங்குவதிலே ஒரு முன்னிலை மாநிலமாக திகழவேண்டும் என்பதற்காக தொழில் முனைவோர் மாநாட்டை சென்னையிலே 2015-ல் முதன்முதலாக தொடங்கினார்கள், அண்மையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிலே சுமார் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்வதற்காக முன்வந்து, 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்றது, இது ஒரு வரலாற்றுச் சாதனை,  அம்மா அரசிற்கு கிடைக்கப் பெற்ற பெரிய வெற்றி. அதுமட்டுமல்லாமல், கிட்டத்தட்ட நேரடியாக 5 லட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,  மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: இப்பொழுது தேர்தல் வர இருக்கின்றது, கூட்டணி பற்றி...
பதில்: நான் ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கின்றேன். தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கும், கூட்டணி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகும். ஏனென்று சொன்னால், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பகுதியிலே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும், தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கும். அம்மா இருக்கும்பொழுது, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக முன்கூட்டியே அறிவிப்பு செய்வார்கள். அதன் அடிப்படையிலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிடகின்ற கழக வேட்பாளர்கள், எந்த நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற விருப்ப மனுவை தருகின்றார்களோ அந்தத் தொகுதியில் வேட்பு மனு கட்டணத்துடன் அந்த வேட்பு மனுவை பூர்த்தி செய்து, தலைமைக் கழகத்தில் சேர்ப்பதற்கு 4-ஆம் தேதியிலிருந்து 10-ஆம் தேதி வரை கால அளவு கொடுக்கப்பட்டு, அந்த கால அளவுக்குள் தாங்கள் போட்டியிட விரும்புகின்ற தொகுதியில் அவர்கள் விருப்ப மனு அளிப்பார்கள்.

கேள்வி: அரசு ஊழியர்களின் போராட்டத்தை நீங்கள் ஒடுக்கியது உண்மையாக, உங்களுக்கு பாராட்டுகள் குவிகிறது, இருந்தாலும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ...
பதில்: நீங்கள் கேட்பதே தவறான கேள்வி.  ஒடுக்கப்பட்டது என்ற வார்த்தை தவறான வார்த்தை.  அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒடுக்குவது என்பது தவறான வார்த்தை, திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள் அவ்வளவு தான், ஒடுக்கப்பட்டது என்பதெல்லாம் தவறு.  இது ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டிலே அவரவர்களது உரிமையை பெறுவதற்கு அவர்கள் கோரிக்கை வைப்பார்கள், அதன் அடிப்படையில் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். எது நியாயமான கோரிக்கையோ, அதை அரசு நிறைவேற்றும். 

கேள்வி: அவர்கள் மீதான நடவடிக்கை எப்படி இருக்கும்?
பதில்: யார் போராட்டம் செய்தாலும் சரி, நீங்கள் போராட்டம் செய்தாலும் சரி, ஆசிரியர்கள் போராட்டம் செய்தாலும் சரி, மற்ற அமைப்புகள் போராட்டம் செய்தாலும் சரி, பல்வேறு அரசியல் கட்சிகள் அவர்களது கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடக்கின்ற பொழுது சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைதான், அவர்கள் மீதும் எடுத்திருக்கிறோமே தவிர வேறு எதுவும் கிடையாது. 

கேள்வி: ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் சென்று, அரசு எதுவும் செய்யவில்லை, உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறாரே?
பதில்: என் மீது விமர்சனம் செய்வதற்கும், கிராம சபை கூட்டத்திற்கும் சம்பந்தமே கிடையாது.  அவருடைய திட்டம் என்னவென்றால், எங்களைத் தாக்கி பேசவேண்டும் என்பதற்காகத் தான் இந்த கிராம சபை கூட்டத்தை பயன்படுத்துகிறாரே தவிர, மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற அடிப்படையில் இந்த கிராம சபை கூட்டம் நடைபெறுவதாகத் தெரியவில்லை. நீங்கள் கேட்கும் கேள்வியிலேயே அந்தப் பொருள் தான் அடங்கியிருக்கிறது.  உண்மையிலேயே கிராமப்புற மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்றால், அங்கிருக்கிற பிரச்சினையை பேசினால் சரியாக இருக்கும்,  அதை விட்டுவிட்டு, அவர் ஏதேதோ பேசிப் பார்த்தார், எத்தனையோ போராட்டங்களை தூண்டிவிட்டார், எத்தனையோ பொய் வழக்குகள் போடுவதற்கு முயற்சி செய்தார், அத்தனையும் தோல்வியில் முடிந்துவிட்டது.  என்றைக்கும் உண்மை தான் வெல்லும், தர்மம் தான் வெல்லும், நீதி தான் வெல்லும்.  அந்த அடிப்படையிலே, அவர்கள் போட்டது அத்தனையுமே பொய்த்து விட்டது. 

அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்த கிராம சபை கூட்டத்தில், தேவையற்ற கருத்துக்களை அவர் பேசி வருகிறார், அவர் விரக்தியின் விளிம்பிற்கு சென்று விட்டார், வேறு ஒன்றும் கிடையாது. அவர் கிராம சபை கூட்டத்தில், நான் எல்லா கிராமத்திற்கும் போய்விட்டு வந்தேன் என்கிறார், எத்தனை முறை நம்முடைய மாவட்டத்திற்கு வந்தார்? அவர் சொன்னார், கிராமம் தான் கோயில் என்று.  நல்ல வேளை இப்பொழுதுதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது கிராமம் தான் கோயில் என்று. இவர் ஆளுகின்ற தரப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது, அவருடைய பணிகள் என்ன ? கிராமமானாலும், நகரமானாலும், பேரூராட்சியானாலும், மாநகராட்சியானாலும் சரி, அந்தப் பகுதியில் இருக்கின்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற பணி அந்தத் துறைக்கு இருந்தது, அந்த துறைக்கு அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தார், என்ன செய்தார்? அங்கு கூட்டுக் குடிநீர் திட்டம் இல்லை, டுiபாவ இல்லை, ரோடு இல்லை என்கிறார்.  உங்களை ஆட்சியிலே அமர்த்தி, உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பும் கொடுத்து, அதிலும், பதவியில் இருந்த காலத்தில் ஏன் செய்யவில்லை என்பதுதான் நம்முடைய கேள்வி. 

கேள்வி: இடைக்கால பட்ஜெட்டை தம்பிதுரை புறக்கணித்திருக்கிறாரே?
பதில்: இதுவரையில், அதைப்பற்றி தகவல் வரவில்லை.

இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து