ரிஷப், இந்திய அணியின் சொத்து - ஷிகர் தவான் புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2019      விளையாட்டு
Dawan - Pant 2019 02 05

மும்பை : ரிஷப் பந்த் ஆக்ரோஷமாக விளையாடி எதிரணியிடம் இருந்து போட்டியை நொடிப்பொழுதில் பறிக்கும் வல்லமை படைத்தவர் என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இன்று தொடக்கம்...

நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக்கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று வெலிங்டனில் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் டி20 தொடரில் விளையாடுகிறார். ரிஷப் பந்த் ஆக்ரோஷமான வீரர், எதிரணியிடம் இருந்து நொடிப்பொழுதில் போட்டியை இந்தியா பக்கம் திருப்பும் வல்லமை படைத்தவர் என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

சற்று ஓய்வு தேவை...

இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன். அவர் இந்திய அணியின் சொத்து. எதிரணியிடம் இருந்து ஆட்டத்தை இமைக்கும் பொழுதில் இந்தியா பக்கம் திருப்பும் வல்லமை படைத்தவர். டி20 வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். ரவி சாஸ்திரி சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, நான் உள்பட சிலருக்கு ஓய்வு தேவை என்று தெரிவித்துள்ளார். நாங்களும் மனிதர்கள்தான். எங்களுடைய உடலுக்கும் சற்று ஓய்வு தேவை. ஆஸ்திரேலியா தொடரை எப்படி வெற்றிகரமாக முடித்தோமோ, அதைபோல் நியூசிலாந்து தொடரை வெற்றிகரமாக முடித்து சொந்த நாடு திரும்ப விரும்புகிறோம்.

அதிரடி ஆட்டத்தை...

பவர்பிளே ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவேன். என்றாலும் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்துதான் அது அமையும். தொடக்கத்தில் ஏராளமான ஷாட் சரியாக அமைந்தால், அதன்பின் என்னுடைய வழக்கமான ஆட்டம் தானாகவே வெளிப்படும். பவுன்சர் பந்தில் அடிக்கடி ஆட்டமிழந்ததால், டென்னிஸ் பந்தில் பயிற்சி மேற்கொண்டேன். உலகக்கோப்பைக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டி போதுமானது. இருந்தாலும் நாங்கள் டி20 தொடரோடு ஆட்டத்தை முடிக்கிறோம். இதுவரை நாங்கள் ஆடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து