10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: உடனடியாகத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      இந்தியா
Supreme Court 27-09-2018

புதுடெல்லி, பொருளாதார ரீதியாக நலிவுற்ற அனைத்து பிரிவினருக்குமான 10% இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாகத் தடை விதிக்க  சுப்ரீம் கோர்ட்மறுத்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, தொழிலதிபர் தெஹ்சீன் பூனாவல்லா தொடர்ந்த வழக்கில், இவ்வாறு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வழக்கை முன்னதாக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. 

அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, சட்டமாக இயற்றப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் சில சட்டத்தை அமல்படுத்தி உள்ளன.

இதனிடையே, இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதாரம் மட்டுமே அளவுகோலாக இருக்க முடியாது என்ற அடிப்படையில் , இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பூனாவல்லா மனு அளித்திருந்தார். அவரின் மனுவில், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சத்தை இந்தச் சட்டம் மீறுகிறது என்றும் பொருளாதார அடிப்படைகள் பொதுப்பிரிவினருக்கு மட்டுமானதாக இருக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் 50% இட ஒதுக்கீட்டு வரம்பு மீற முடியாதது என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்தச் சட்டத்துக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.ஆனால் இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாகத் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை முன்னதாக விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து