2-வது டி-20 போட்டி: நியூசி.யை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      விளையாட்டு
Rohit Sharma 2019 02 08

Source: provided

ஆக்லாந்து : ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

டாஸ் வென்ற...

நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது.

கட்டாய சூழல்...

இந்திய அணியை பொறுத்தவரை இந்தப்போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழலில் உள்ளது. இந்தப்போட்டியில் தோல்வி அடைந்தால்,  நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழக்க வேண்டியதுதான். தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இந்த ஆட்டத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் நமது வீரர்கள் எழுச்சி பெறுவார்களா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இந்திய அணி கடைசியாக ஆடிய 10 இருபது ஓவர் தொடர்களை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைக்க நேற்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

இரு அணிகளிலும் இடம் பெற்ற வீரர்கள் விவரம்:

இந்தியா:  ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக், எம்.எஸ் டோனி, விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா, யுஸ்வேந்திர சகால், புவனேஷ்குமார், கலீல் அகமது,

நியூசிலாந்து:  டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல்,  காலின் டி கிரான்ட்ஹோம், சான்ட்னெர், ஸ்காட் குஜ்ஜெலின், டிம் சவுதி, இஷ் சோதி, லோக்கி பெர்குசன்.

செய்பர்ட் அவுட்...

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கடந்த போட்டியை போல ரன்களை வாரி வழங்காமல், நேற்றைய போட்டியில், இந்திய பந்து வீச்சாளர்கள் சுதாரிப்புடன் பந்து வீசினர். முதல் ஆட்டத்தில் மிரட்டிய நியூசிலாந்து துவக்க வீரர் செய்பர்ட் 12 ரன்களில்  புவனேஷ்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார்.  மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கோலின் முன்ரோ ( 12 ரன்கள்), கேப்டன் வில்லியம்சன் (20 ரன்கள்) , மிட்செல் ( 1 ரன்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ரோஸ் டெய்லர்...

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ் டெய்லர் 42 ரன்களில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். 4 சிக்சர்களை பறக்க விட்டு அதிரடி காட்டிய  கிரான்ட்ஹோம் (50 ரன்கள், 28 பந்துகள்) ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தியா வெற்றி...

இதனை தொடர்ந்து இந்திய அணி 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடி கேப்டன் ரோகித் ஷர்மா அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தார். சுழற்சி பந்துவீச்சாளர் சோதி வீசிய பந்தில் அவர் கேட்ச் ஆனார். அவரை தொடர்ந்து தவான் 30(31), விஜய் சங்கர் 14(8) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர், ரிஷப் பண்ட் உடன் தோனி ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். பண்ட் 40 (28), டோனி 20 (17) எடுக்க 18.5 ஓவரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று விக்கெட் வீழ்த்திய குர்ணால் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து, இந்திய அணி தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 1-1 என்ற நிலையில் தொடர் சமனில் உள்ளது.

ரோகித் உலக சாதனை

நேற்று நடைபெற்ற 2-வது டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா 29 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன்மூலம், சர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ரோகித் சர்மா 35 ரன்னைத் தொட்டபோது, நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை (2,272) பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார்.

இந்த போட்டிக்கு முன்பு வரை, ரோகித் சர்மா 2,238 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் இருந்தார். இந்த போட்டியில் 50 ரன்கள் அடித்ததன் மூலம், 2,288 ரன்கள் சேர்த்துள்ளார். அத்துடன், ரோகித் சர்மா சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் 4 சதம், 15 அரைசதம் விளாசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து