திட்டத்தை சரியாக வெளிப்படுத்தினோம்: வெற்றி குறித்து ரோகித் சர்மா போட்டி

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      விளையாட்டு
Rohit - Dawan 2019 02 08-

Source: provided

ஆக்லாந்து : எங்களது திட்டத்தை சரியாக வெளிப்படுத்தியதால் வெற்றி கிடைத்தது என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி...

நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் குருணால் பாண்டியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா 50 ரன்னும், தவான் 30 ரன்னும் அடித்தனர். ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 40 ரன்களும், டோனி ஆட்டமிழக்காமல் 20 ரன்களும் சேர்த்தனர். இதனால் இந்தியா 18.5 ஓவரில் 162 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பலன் கிடைத்தது...

குருணால் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. கடைசி போட்டி நாளை ஹாமில்டனில் நடக்கிறது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த வெற்றி குறித்து கூறுகையில் ‘‘முதலில் சிறப்பாக பந்து வீசிய பின், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட விதம் மகிழ்ச்சியளிக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் எங்களது திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. ஆனால், இந்த போட்டியில் சரியாக செயல்படுத்தினோம். அதற்கான பலன் எங்களுக்கு கிடைத்தது.

விளையாடுவோம்...

நமது தவறுகளை புரிந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது. தெளிவான மனநிலையுடன் வீரர்கள் களம் இறங்கி விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். தரமான அணியை நாங்கள் பெற்றுள்ளோம். அடுத்த போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று (நேற்று) எப்படி விளையாடினோமோ, அதைபோல் கடைசி போட்டியிலும் விளையாடுவோம் என்று நம்புகிறேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து