அரசு பங்களாவை காலி செய்ய லல்லு மகனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      இந்தியா
Tejashwi-Yadav 2019 02 04

புது டெல்லி : அரசு பங்களாவை காலி செய்ய லல்லு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் கடந்த 2015-ம் ஆண்டு ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்தது லல்லு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம். அப்போது கட்சித் தலைவர் லல்லு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. அவருக்கு துணை முதல்வருக்கான அரசு இல்லமும் ஒதுக்கப்பட்டது.

பின்னர் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜனதாவுடன் கூட்டணியை மாற்றிக் கொண்டது. இதனால் ராஷ்டிரிய ஜனதாதளம் மாநில அரசை விட்டு வெளியேறியது. தற்போது தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சித்தலைவராக உள்ளார். அவருக்கு வேறு பங்களாவும் ஒதுக்கப்பட்டது.

ஆனால் புதிய வீட்டுக்கு மாறாமல், துணை முதல்வருக்கான அரசு வீட்டிலேயே அவர் தொடர்ந்து வசித்து வருகிறார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த 2 அமர்வுகள், துணை முதல்வருக்கான அரசு பங்களாவை காலி செய்ய தேஜஸ்விக்கு உத்தரவிட்டன. எனினும் இந்த உத்தரவுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார் தேஜஸ்வி. அங்கு இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, துணை முதல்வர் அரசு பங்களாவை தேஜஸ்வி காலி செய்ய உத்தரவிட்டது. மேலும் ஐகோர்ட்டு 2 முறை உத்தரவிட்டும் கேட்காமல் தொடர்ந்து நீதித்துறையின் நேரத்தை வீணடித்ததற்காக தேஜஸ்விக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து