வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால் புதிய இந்தியாவை உருவாக்க முடியும் - அருணாச்சலில் பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      இந்தியா
pm modii 2018 11 26

இடாநகர் : நாட்டின் வடகிழக்கு முன்னேறினால்தான் நாடு முன்னேறும். வடகிழக்கை முன்னேற்றவே நாங்கள் பாடுபடுகிறோம் என்று அருணாச்சலில் பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசம், திரிபுரா, அசாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டார். நேற்று அருணாச்சல பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட  பிரதமர் மோடி சில திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கு பேசிய பிரதமர் மோடி, கூறியதாவது:-

அருணாச்சல் சூரிய உதயத்தின் நிலம். இவ்விடம் நமக்கு உறுதியை கொடுக்கிறது. அருணாச்சல பிரதேசத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் போக்குவரத்து, மருத்துவத்தை மேம்படுத்த ஏதுவாக மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடி செலவில் பல நலத்திட்டங்களை வழங்க உள்ளது.

அருணாச்சல பிரதேசம் தண்ணீர் தேசமாக இருக்கிறது. இது இம்மாநிலத்தின் கொடை. இந்தத் தண்ணீர் சக்தியை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம். ஆனால் முந்தைய அரசு அப்படி ஏதும் செய்யவில்லை. அவர்கள் இம்மாநிலத்தை புறக்கணித்தார்கள். வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால் மட்டுமே, புதிய இந்தியாவை உருவாக்க முடியும். வடகிழக்கை முன்னேற்றவே நாங்கள் பாடுபடுகிறோம்.

அருணாச்சல பிரதேசத்துக்கு பா.ஜ.க. அரசு இரண்டு விமான நிலையங்களை கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாவும் அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் எல்லா பகுதிகளுடன் இணைத்திருக்கிறோம். இம்மாநிலம் நாட்டின் பாதுகாப்பு நுழைவு வாயிலாக உள்ளது. இதனை மேம்படுத்தவே நாங்கள் நடவடிக்கையை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து