மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணி: பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி நேரில் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      தமிழகம்
cm edapadi-pm modi 2019 02 09

திருப்பூர் : சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் கடிதம் வழங்கினார். இரண்டாம் கட்டப் பணி தொடங்க விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் புதுப்பாளையம் பிரிவில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று தனி விமானம் மூலம் கோவை வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு வந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.

நினைவு பரிசு...

பின்னர் இந்த நிகழ்ச்சிக்காக பிற்பகல் 3.05 மணிக்கு ஹெலிகாப்டரில் வருகை தந்த மோடி, 3.15 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். விழா மேடைக்கு வந்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடராஜர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார். விழா மேடையில் பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களின் விளக்க வீடியோக்கள் காண்பிக்கப்பட்டது.

திட்டங்கள் துவக்கம்...

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி திருப்பூரில் 100 படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை, புதிதாக கட்டமைக்கப்பட்ட திருச்சி விமான நிலையம்,நவீன மயமாக்கப்பட்ட சென்னை விமான நிலையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ இரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் எஸ். பி.வேலுமணி, விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ.,க்கள் திருப்பூர் தெற்கு சு.குணசேகரன், பல்லடம் கரைபுதூர் நடராஜன், காங்கேயம் தனியரசு,திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம்,செயலாளர் விஜயகுமார்,நிர்வாக செயலாளர் சக்திவேல், சைமா தலைவர் வைக்கிங் ஈஸ்வரன்,செயலாளர் எம்பரர் பொன்னுசாமி, டீமா தலைவர் முத்து ரத்தினம், தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.ஜப்பார், வி.ராதாகிருஷ்ணன், சித்துராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக 3 ஐ.ஜி க்கள் தலைமையில் 17 போலீஸ் எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிரதமரிடம் நேரில் கடிதம்...

இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஒரு கடிதம் வழங்கினார். அந்த கடிதத்தில், சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாம் கட்டப் பணி குறித்து முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாம் கட்டப் பணி தொடங்க விரைவாக அனுமதி வழங்க வேண்டும். இந்த பணிக்கு 50 சதவீத பங்களிப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த திட்டம் தொடர்பாக 118.9 கி.மீ தூரத்திற்கு பணிகளை துவக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்கு ஜப்பான் நிறுவனம் ரூ. 20,196 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக டெல்லிக்கு கடிதம் எழுதும் முதல்வர் தற்போது நேரிலேயே பிரதமரிடம் தனது கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து