கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு - தமிழக அரசாணை வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      தமிழகம்
Kaja storm nagai-vedaranyam 2018 11 17

சென்னை : கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் நவம்பர் 16-ம் தேதி கஜா புயல் 12 மாவட்டங்களை புரட்டி போட்டது. இதில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் நாகை உள்ளிட்டவை அதிக பாதிப்படைந்தன. கஜா புயலின் தாக்குதலால் லட்சக்கணக்கான தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமாகின. லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் மீன்பிடி படகுகள் சேதமடைந்தன.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கினர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது. அதன்பின் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்தன. அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட்டன.

இந்த நிலையில், கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க ரூ. 683.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. படகுகளை சீரமைப்பதற்கான பணிகள், புதிய மீன்பிடி வலைகளை வாங்கவும் தமிழக அரசு மீனவர்களுக்கு நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மீனவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, 1,051 படகுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து