ஏழை குடும்பங்களுக்கு சிறப்பு நிதி: அரசின் முடிவிற்கு ராமதாஸ் பாராட்டு

சென்னை, ஏழைகளுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.
நகர்ப்புறங்களில்...
தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். விவசாயத் தொழிலாளர்களில் தொடங்கி அனைத்துத் தொழிலாளர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும். நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படவிருக்கிறது.
பெரிதும் உதவியாக...
பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஏதேனும் உதவி வழங்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள ரூ.2,000 நிதியுதவி ஏழைக்குடும்பங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அடிப்படை வருமானத் திட்டம் என்பது தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் ஆகும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.