முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகருக்கு டிசம்பர் முடிய தினமும் 550 மி.லி குடிநீர் கிடைக்கும்- ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, இன்னும் கடுமையான வறட்சி ஏற்பட்டாலும், இந்த சென்னை மாநகருக்கு டிசம்பர் -2019 முடிய தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று எதி்ர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கமளித்தார்.

திமுக ஆட்சியை விட அதிக நிதி

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகரின் குடிநீர் பிரச்னை தொடர்பாக எழுப்பிய கவன ஈர்ப்புக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பதில் வருமாறு:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில், 2011 முதல் 2016 வரையிலான 5 ஆண்டுகளில், குடிநீர் திட்டப் பணிகளுக்கென, முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 7,280 கோடியே 12 லட்சம் ரூபாய் தொகையை விட, 14,708 கோடியே 9 லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கி மொத்தம் 21,988 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது.

ஜெயலலிதா தந்த அதே முக்கியத்துவம்

2016-ம் ஆண்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று, 2016-17-ம் ஆண்டிலும், அதைத் தொடர்ந்து, எடப்பாடியார், முதலமைச்சராகப் பொறுப்பேற்று, கடந்த ஜனவரி-2019-ம் மாதம் வரையில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக, 14,219 கோடியே 59 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் 1 லட்சத்து 23 ஆயிரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குடிநீர் திட்டப் பணிகளுக்கு தந்த முக்கியத்துவத்தை, முதல்வர் எடப்பாடியாரும் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார். 2016-17-ம் ஆண்டு முதல் ஜனவரி -2019 வரையில், அம்மாவின் அரசு, சென்னை மாநகராட்சிப் பகுதியில், 2,464கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில், 4,092 குடிநீர்ப் பணிகளுக்கும்,பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், 4,409 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பில், 6,834 குடிநீர்ப் பணிகளுக்கும் பேரூராட்சிகளில், 77 கோடியே 23 இலட்சம் ரூபாய் மதிப்பில், 3,561 குடிநீர்ப் பணிகளுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 5,339 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில், 267 குடிநீர்ப் பணிகளுக்கும், ஊரகப் பகுதிகளில், 1,928 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பில், 1 லட்சத்து 8 ஆயிரத்து 171 குடிநீர்ப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டுள்ளது.·

மாநகரின் தாகத்தை தீர்க்க 158 கோடி

மே மற்றும் ஜூன் -2019, மாதங்களில், குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க மோட்டார் திறனை அதிகரித்தல், ஆழ்துளை குழாய் கிணறுகளை சுத்தப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல், புதிய ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட 39,257 பணிகள் மேற்கொள்ள 1015.34 கோடியில் செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் - 280.38 கோடி, நகராட்சி நிர்வாகம் 103.79 கோடி, பேரூராட்சிகள் துறை - 118.36 கோடி, ஊரக வளர்ச்சி துறை, 448.92 கோடி, தமிழ்நாடு குடிநீர் வாரியம் - 63.89 கோடி2019-ம் ஆண்டு கோடைக்கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முதலமைச்சர் எடப்பாடியார் முதற்கட்டமாக கடந்த 31.1.2019 அன்று சென்னை குடிநீர் வாரியத்திற்கு ரூ. 122 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ. 36 கோடியும் ஆக மொத்தம் ரூ.158 கோடி நிதியினை ஒதுக்கி, வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத 8 பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்தும், விருதுநகர், சேலம், வேலூர், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், 74 லட்சத்து 82 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான, 6 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை 2,936 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். மீதமுள்ள 2 கூட்டுக் குடிநீர் திட்டங்களும் தற்போது முடிக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் உள்ளது. அம்மாவின் பொற்கால ஆட்சியில், மத்திய மாநில அரசு நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் அம்ரூத் திட்டத்தின் கீழ் ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 6 மாநகராட்சிகளிலும், கும்பகோணம், ஆம்பூர், ஒசூர், இராஜபாளையம் மற்றும் நாகர்கோவில் ஆகிய 5 நகராட்சிகளிலும், 60 லட்சத்து 46 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், 5,506 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 14 குடிநீர்த் திட்டப் பணிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. அவற்றில் 12 திட்டப் பணிகள் செயலாக்கத்தில் உள்ளன. மீதமுள்ள 2 பணிகள் விரைவில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் மதுரை, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளில் ரூ. 337.56 கோடியில் பெரிய குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கடந்த 142 வருடங்களில் இல்லாத வகையில், 2017-ம் ஆண்டில் ஏற்பட்ட வரலாறு காணாத கடும் வறட்சியிலும், 62 சதவீத மழை குறைவிலும் அம்மாவின் அரசு, நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 1083 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 42,128 குடிநீர்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 5,891 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு, 2016-17 மற்றும் 2017-18 ஆகிய 2 ஆண்டுகளில் சென்னை மாநகரின் குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக 2,464 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து 4,092 பணிகளை மேற்கொண்டுள்ளது. 2017-ல், 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்ட காலத்தில் இயற்கை ஏற்படுத்திய இடரை, முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு, திறம்பட எதிர்கொண்டு சமாளித்தது. மக்களுக்கு சிரமங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் 112 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 4090 வறட்சி நிவாரணப் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டு சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 550 மில்லியன் லிட்டருக்கு குறையாமல் குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, சில புதிய முயற்சிகளாக, குன்றத்தூர் அருகில் சிக்கராயபுரத்தில், பயன்பாட்டில் இல்லாத 22 குவாரிகளில் தேங்கியிருந்த மழைநீரை சுத்திகரித்து, நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகருக்கு 24.10.2017 வரை விநியோகம் செய்யப்பட்டது. அதே போல கூடுதல் முயற்சியாக 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின்மோட்டார்கள் மற்றும் குழாய்கள் அமைக்கப்பட்டு இஸ்ரேல் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட வடிகட்டி துகள்கள் மூலம் போரூர் ஏரியிலுள்ள நீரை சுத்திகரிப்பு செய்து நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. இம்முயற்சிகளால், கடந்த 142 வருடங்களில் இல்லாத வறட்சி நிலவிய போதும் அரசு திறம்பட செயல்பட்டு சென்னை மாநகர மக்களுக்கு நாளொன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை, அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்றனர். 2018-ம் ஆண்டில் 54 சதவீதம் பருவ மழை குறைவாக பெய்தாலும், 2017-ல் கையாளப்பட்ட வறட்சி நிவாரணப் பணிகள் போன்றே இந்த ஆண்டும் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 11 கோடியில், சிக்கராயபுரம் கல்குவாரி நீரினை சுத்திகரித்து தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.19.17 கோடியில் எருமையூர் கல்குவாரியிலிருந்து நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

171 புதிய ஆழ்துளை கிணறுகள்

மேட்டூர் அணையிலிருந்து, வீராணம் ஏரிக்கு மீண்டும் ஒரு முறை நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.6.67 கோடியில் நெய்வேலி நீர் படுகையில் கூடுதலாக 9 புதிய ஆழ்துளை கிணறுகள் - 10 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. நெய்வேலி சுரங்கத்திலிருந்து 25 மில்லியன் லிட்டா் மற்றும் பரவனாறு ஆற்றிலிருந்து 40 மில்லியன் லிட்டர் மற்றும் கடிலம் ஆற்றுப் படுகையில் 25மில்லியன் லிட்டர் ஆக மொத்தம் 90 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரூ. 47 கோடியில், பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 350 விவசாயக் கிணறுகள் மூலம் 90 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படும். ரூ. 53 கோடியில், இரட்டைஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளிலிருந்து நாளொன்றுக்கு 30 மில்லியன் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ரூ. 42.78 கோடியில், பெருங்குடியிலும், ரூ. 41 கோடியில், நெசப்பாக்கத்திலும், நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட தலா ஒரு 3-ம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கும் சுத்திகரித்த நீரை வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.8 கோடியில் நிலத்தடி நீர் பெற புதிதாக 423 இந்தியா மார்க் 2 பம்புகள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ. 9 கோடியில், 171 எண்ணிக்கையில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ. 4.71 கோடியில், 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1294 எச்.டி.எப்.இ. குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். ரூ. 39.60 கோடியில் கூடுதல் லாரிகளை வாடகைக்கு அமர்த்தி குழாய் மூலம் குடிநீர் செல்லாத பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும்.

சென்னைக்கு குடிநீர் பஞ்சம் இருக்காது

நடப்பாண்டில் பெற வேண்டிய, கிருஷ்ணா நதி நீரை பெறும் பொருட்டு, முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அரசு 4.1.2019 தேதியில் ஆந்திர அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததின் காரணமாக, 9.1.2019 அன்று கிருஷ்ணா நதி நீர் ஒழுங்குமுறை ஆணையக் கூட்டத்தில் குடிநீர் வழங்க உறுதி அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், சென்னைக்கு குடிநீர் வழங்க முடிவு செய்ததன் அடிப்படையில், கண்டலேறு நீர்த் தேக்கத்திலிருந்து 10.02.2019 முதல் பூண்டி நீர்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதி நீர் பெறப்படுகிறது. 12.02.2019 முடிய 7 மில்லியன் கன அடி கிருஷ்ணா நதி நீர் வரப்பெற்றுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி நீர் கிடைக்கப் பெற வேண்டும். இதில் 2 டி.எம்.சி நீர் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கடுமையான வறட்சி ஏற்பட்டாலும், இந்த பணிகளால் சென்னை மாநகருக்கு டிசம்பர் - 2019 முடிய தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.

86 பேரூராட்சிகளில், 232 பணிகள்

சென்னை நீங்கலான பிற 12 மாநகராட்சிகளில் மற்றும் 124 நகராட்சிகளில் கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 110 லிட்டரும், மதுரை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 முதல் 109 லிட்டர் வரையிலும் 66 நகராட்சிகளில், நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டருக்கு மேலும், 58 நகராட்சிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 முதல் 89 லிட்டர் வரையிலும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. கோடைக் கால குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க வறட்சி நிவாரணப் பணிகளின் கீழ் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், ஆழ்துளை கிணறுகளை தூர் வாருதல், புனரமைத்தல், நீர் ஆதாரங்களில் நீருறிஞ்சி கிணறுகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், விவசாய கிணறுகளை வாடகைக்கு அமர்த்துதல், உள்ளிட்ட 2782 வறட்சி நிவாரணப் பணிகள் ரூ. 103.79 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 528 பேரூராட்சிகளிலும் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டருக்கு மேல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 524 பேரூராட்சிகளில் நாள் தோறும், 4 பேரூராட்சிகளில், 2 நாட்களுக்கு ஒரு முறையும், குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டில் மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதி, பொது நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியின் கீழ் 91 பணிகள் ரூ. 93.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வறட்சி எதிர்நோக்கும் 86 பேரூராட்சிகளில், 232 பணிகள் ரூ. 24.83 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 5,175 ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 548 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் தனி குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

4 மாவட்டங்களில் முடியும் நிலையில் பணிகள்

உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வழங்க, 1.15 லட்சம் விசைப் பம்புகள், 1.23 லட்சம் சிறு மின்விசைப் பம்புகள், 1.96 லட்சம் கைபம்புகள், 7,381 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகளும், 1.01 லட்சம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியன பயன்பாட்டில் உள்ளது. ஊரகப் பகுதிகளில், மொத்தமுள்ள 79,394 குக்கிராமங்களில், நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 4,070 குக்கிராமங்களில் 40 லிட்டருக்கு குறைவாகவும், 12,845 குக்கிராமங்களில் 40 முதல் 55 லிட்டர் வரையிலும், 62,479 குக்கிராமங்களில், 55 லிட்டருக்கு மேலும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடைக்கால குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க, கிராம வாரியாக செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 30,951 வறட்சி நிவாரணப் பணிகள் ரூ. 448.92 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் 556 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம், 4.23 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், நாளொன்றுக்கு 1835 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில், சேலம், நாகப்பட்டினம், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 1134 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 4 பெரிய குடிநீர் திட்டங்கள் முடிவுறும் நிலையில் உள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு 107.50 மில்லியன் லிட்டர் குடிநீர் இந்த மாவட்ட மக்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.

மேலும், எதிர் வரும் கோடையினை சமாளிக்க ரூ. 63.89 கோடி மதிப்பீட்டில், புதிய நீராதரங்கள் அமைத்தல், பழுதடைந்த மின் மோட்டார்களை மாற்றியமைத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட நீருந்து குழாய்களை மாற்றுதல், ஆகிய பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. முந்தைய தி.மு.க. ஆட்சியின் முடிவில், தமிழகத்தில் நாளொன்றுக்கு 4,945 மில்லியன் லிட்டர் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் அம்மா ஆட்சியில், குடிநீரின் அளவானது 2,450 மில்லியன் லிட்டர் அதிகமாக வழங்கப்பட்டு, நாளொன்றுக்கு, 7,395 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு மகத்தான சாதனை படைக்கப்பட்டது. மேலும் அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகளின் காரணமாக, தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில், தற்போது 99.11 விழுக்காடு மக்களுக்கு, குழாய் மூலம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழகத்தில், ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் அம்மாவின் அரசு சீரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படி, 28.02.2018 அன்று, நான் புதுதில்லியில் மத்திய நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சரை சந்தித்து, நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்க, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். இந்த தொடர் முயற்சியினால் 29.03.2018 அன்று முதல் கடன் தொகையான 1744.40 கோடி ரூபாய்க்கு ஜெசிகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அரசால், இத்திட்டத்திற்கான, தேசிய கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்தின் இசைவு 31.10.2018 அன்று சென்னை குடிநீர் வாரியத்தால் பெறப்பட்டது. திட்ட மேலாண்மை ஆலோசகரை தேர்வு செய்வதற்கான ஆர்வ விழைவு படிவங்கள் 24.07.2018 அன்று 6 நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு, அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 நிறுவனங்களுக்கு கருத்துரு கோரும் ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் 21.02.2019 அன்று பெறப்பட்டு, மதிப்பாய்வு செய்த பின் திட்ட ஆலோசகரை நியமிக்கும் பணிகள், மார்ச் 2019-க்குள் முடிவு செய்யப்படும்.

வரும் செப்டம்பர் மாதத்திற்குள் , கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், குடிநீர் விநியோக கட்டமைப்பு ஆகியவற்றிற்கான வடிவமைப்பு, விரிவான மதிப்பீடு அறிக்கை, ஒப்பந்த புள்ளி ஆவணங்கள் ஆகியவை திட்டமேலாண்மை ஆலோசகரால் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும். சர்வதேச அளவிலான ஒப்பந்தங்கள் நவம்பர் 2019-ல் கோரப்பட்டு பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு செப்டம்பர் -2020-க்குள் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகள் வழங்கப்படும். நிலையம் அமைக்கும் பணிகள் அக்டோபர் - 2020-ல் தொடங்கப்பட்டு மார்ச் 2024-க்குள் முடிக்கப்படும்.
வட நெம்மேலியில் 100 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அம்மாவின் ஆட்சியில் 2006 - 2007 ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தை மே மாதம் 2006-ம் ஆண்டு பொறுப்பேற்ற தி.மு.க. அரசு எந்தவித துரித நடவடிக்கையும் எடுக்காமல், திட்ட மதிப்பீட்டுத் தொகையான ரூ. 914.42 கோடியில் மத்திய அரசின் நிதி உதவித் தொகையான ரூ. 871.24 கோடி தொகையை 3 ஆண்டுகள் கழித்து 17.3.2009 அன்று தான் பெற்றது. மேலும் ஓராண்டு கழித்து பணி தாமதமாக 22.10.2010 அன்று தான் துவங்கப்பட்டு, தி.மு.க. ஆட்சி முடியும் போது 28 சதவீத பணிகள் தான் முடிவடைந்தன. மீண்டும் 2011-ல் ஜெயலலிதா ஆட்சி அமைந்த போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டு மீதமுள்ள பணிகள் 22.2.2013 அன்று முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து