முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புதிய மாநகராட்சிகளாக நாகர்கோவில், ஒசூர் உருவாகின்றன: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் புதிய மாநகராட்சிகளாக நாகர் கோவில், ஒசூர் ஆகியவை உருவாகின்றன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கிறது.

தமிழக சட்டசபையின் நேற்று கேள்வி நேரம், நேரமில்லா நேரம் ஆகியவற்றிற்கு பின்னர் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, புதிய சட்டமுன்வடிவு ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த சட்டமுன்வடிவில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுவரை ஆணையத்தால் செய்யப்படும் எல்லை வரையறைப் பணிகள் முடிவடைந்த பின்னர் நாகர் கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக தேவைப்படும் மாற்றமைவுகளுடன் 1981-ம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்தின் வரைமுறைகளை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தினை இயற்றுவதென அரசு முடிவு செய்துள்ளது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஓசூரும் பிரிக்கப்பட்டு தனி மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்திற்குப் பின்னர் நாகர்கோவில் மற்றும் ஒசூர் மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தினார். இந்த சட்டம் சட்டசபையின் பட்ஜெட் விவாதம் நிறைவடையும் இறுதி நாளான இன்று நிறைவேற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அமைச்சர் வேலுமணி முன்வைத்த அவசர சட்ட முன்வடிவில், மாநகராட்சியாக சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் நாகர்கோவில் மாநகராட்சிக்கென்று ஒரு மேயர் பதவியும், மாநகராட்சி மன்றமும் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலைக்குழுவும் சிற்றொகுதிகள் குழுவும் அமைக்கப்படும் என்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்கென்று ஆணையரும் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சியில் வாக்காளர்களாக உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாநகராட்சி மன்றத்தில் பிரதித்துவம் பெறுவார்கள். மன்றத்தில் பங்கெடுக்க உரிமை பெற்றிருந்தாலும் வாக்களிக்க உரிமை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மன்றத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். மொத்த எண்ணிக்கையில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த மாநகராட்சிகளின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். மாநகராட்சிக்கான சட்டம் தொடங்கிய தேதிக்கு உடனடியாக நகராட்சி மன்றத்தால் விதிக்கப்பட்டு வந்த அனைத்து வரிகளும் கட்டணங்களும் தீர்வைகளும் இந்த சட்டத்தின் வகைமுறைகளின்படி மாநகராட்சியால் விதிக்கப்பட்டு வந்திருப்பதாக கொள்ளப்படும். மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி நாகர் கோயில் நகராட்சியாக தயாரிக்கப்பட்டு இந்த சட்டம் தொடங்கிய தேதியன்று முதல் நடைமுறையில் இருக்கும் வாக்காளர்பட்டியல் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுவது வரையிலும் மாநகராட்சிக்குரிய வாக்காளர் பட்டியலாக கொள்ளப்படுதல் வேண்டும். மாநகராட்சி மன்றம் நிலைக்குழு, ஆணையர் சிற்றொகுதிகள் குழு ஆகியவற்றின் அதிகாரங்களை செலுத்தவும், கடமைகளை நிறைவேற்றவும் செயல்பாடுகளை செய்து முடிப்பதற்கும் ஆணையரின் அதிகாரத்தை செலுத்த தனிஅலுவலர் நியமிக்கப்படுவார். மாநகராட்சிக்கு தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் மன்றத்தின் முதல் கூட்டம் வரை தனி அலுவலர் பணியாற்றுவார் என்று அந்த சட்டமுன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து