முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ' பிளாஸ்டிக் ' பயன்படுத்தினால் ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் - சட்டசபையில் சட்ட மசோதா தாக்கல்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட ' பிளாஸ்டிக் ' பயன்படுத்தினால் ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மசோதா நேற்று சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.

தமிழகம் முழுவதும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்முறை என்பதால் தடையை மீறியவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. மறுமுறை விதிகளை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த எந்த அறிவிப்பும் தமிழக அரசின் ஆணையில் இடம் பெற்றிருக்கவில்லை.

மசோதா தாக்கல்...

இந்நிலையில் பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3-ம் தடவை ரூ.5 ஆயிரம்...

சிறிய வணிக விற்பனையாளர்களால் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்ற வகைக்கு முதல் தடவைக்கு 100 ரூபாயும், இரண்டாம் முறைக்கு 200 ரூபாயும், மூன்றாம் முறைக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.மளிகைக்கடைகள் மற்றும் மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை 1000 ரூபாயும், இரண்டாம் தடவை 2000 ரூபாயும், மூன்றாம் தடவை 5000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.

ரூ.50 ஆயிரம் அபராதம்...

வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் தடவை 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் தடவை 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

ரூ.1 லட்சம் வரை அபராதம்...

பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கிவீசப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் தடவை 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் தடவை ரூ.1 லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். இவ்வாறு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து