முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த அ.தி.மு.க.வினரிடம் ஓரிரு நாளில் நேர்காணல்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த அ.தி.மு.க.வினருக்கான நேர்காணல் ஒரிரு நாட்களில் தொடங்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விரைவில் நேர்காணல்

அ.தி.மு.க. சார்பில் தேசிய மற்றும்மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.  கூடிய விரைவில் சுமுகமான நல்லமுடிவு ஏற்பட்டு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படலாம். அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு வழங்கும்பணி நிறைவடைந்து இருக்கிறது. இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பெற்றிருக்கின்றனர். ஓரிரு தினங்களில் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணல் முடிந்ததும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

மக்கள் எங்கள் பக்கம்...

அ.தி.மு.க.வின் பொது செயலாளர் ஜெயலலிதா இருந்தபோதும் சரி. அவரது ஆட்சிக்கு பின்னர் நடைபெற்று வரும் ஆட்சியிலும் மக்களுக்காக பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொலைநோக்குள்ள அந்த திட்டங்களை மக்களுக்கு நேரடியாக போய்ச்சேர்ந்துள்ளன. மக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை பாராளுமன்றத்தேர்தலில் நாங்கள் பெறப்போகும் மகத்தான வெற்றி உறுதிப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கண்டிக்கத்தக்கது...

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்ட போது அதற்கு பதிலளித்த துணைமுதல்வர்  விரைவில் நல்ல சுமுகமான முடிவுகள் எட்டப்பட்டு கூட்டணி அமையும் இன்னும் ஒரிரு தினங்களில் கூட்டணி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். அவர்  மேலும் தெரிவிக்கையில், எல்லையில் நடந்த மிகப்பெரிய வன்முறையில் வீரர்கள் வீரமரணமடைந்திருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வன்முறை எங்கு நடந்தாலும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும். எல்லையில் உயிரிழந்த தியாகச் செம்மல்களுக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் பலியான வீரர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து