முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

திருப்பூர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் முகாமிட்டு மக்களை மிரட்டி வந்த சின்னதம்பி யானை நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

சின்னத்தம்பி யானை

கோவை தாடகம் பகுதியில் வனத்தையொட்டிய கிராமங்களில் நுழைந்து விளை நிலங்களை சேதப்படுத்தியும், மனித உயிரிழப்பையும் ஏற்படுத்தி வந்த யானை சின்னத்தம்பியை கடந்த ஜனவரி மாதம் 25 ந் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து,அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி,டாப் சிலிப் அருகே உள்ள வரகலியாரு வனப்பகுதியில் விட்டனர். இந்நிலையில் அந்த யானை பொள்ளாச்சி அருகே உள்ள அங்கல குறிச்சி, ஜெ ஜெ நகர், பொங் காலியூர் கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களிலும், ஊருக்குள்ளும் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை கோபால்சாமி மலையடிவார வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
 
70 பேர் கொண்ட குழு

சின்னத்தம்பி யானைக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் வனத்துறை இணையதளம் மூலம் அந்த யானையை கண்காணித்து வந்தனர். 30 வனத்துறையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.இதற்கிடையே சின்னத்தம்பி யானை சில தினங்களுக்கு முன்பு கோபால்சாமி மலையடிவாரத்தில் இருந்து வெளியேறி உடுமலை அர்த்தநாரிபாளையம், கோபால்சாமி மலை, ராவணாபுரம், கரட்டுமடம், புங்கம்புத்தூர், எரிசனம்பட்டி, உடுக்கம்பாளையம், சாலையூர் வழியாக சர்க்கர்புதூரில் உள்ள பாபு என்பவரின் சோளக்காட்டில் முகாமிட்டுக்கொண்டது சோளப்பயிர்களை தின்றுகொண்டு அங்கிருந்து வெளியேற மறுத்து அடம்பிடித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். சினத்தம்பி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டுசெல்ல உடுமலை, பொள்ளாச்சி வனச்சரகத்தில் இருந்து 70 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர்.

நீதிமன்றம் உத்தரவு

மக்களை அச்சுறுத்தி வந்த சின்னதம்பி யானையை துன்புறுத்தி பிடிக்க கூடாது என உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்ததால் வனத்துறையினர் சின்னத்தம்பியை பிடிப்பதில் எத்தகைய வழிமுறையை கையாள்வது என நீதிமன்ற உத்திரவிற்கு காத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறையினருக்கு சில நிபந்தனைகளை குறிப்பிட்டு சின்னத்தம்பியை பிடிக்க உத்தரவு பிறபித்ததின் பேரில் நேற்று அதிகாலை உடுமலை அருகே உள்ள கண்ணாடிப்புத்தூரில் முகாமிட்டுருந்த சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணியை வனத்துறையினர் துவக்கினர்.வனத்துறையினருடன் சத்தியமங்கலம் புலிகள் காப்பக மருத்துவர் அசோகன்,ஒய்வு பெற்ற வனத்துறை அதிகாரிகள் தங்கராஜ்,பன்னீர்செல்வம், ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் திருப்பூர் மாவட்ட வன அலுவலர் திலீப் ஆகியோர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை சின்னத்தம்பியின் உடல் பகுதியில் செலுத்தினர்.அந்த மயக்க ஊசி யானையின் கால் பகுதியில் பாய்ந்தது.

இதில் மயங்கி விழுந்த சின்னத்தம்பியை பிடித்து லாரியில் ஏற்றியபோது மீண்டும் சின்னதம்பி யானை அடம்பிடிக்காமல் இருக்க கூடுதலாக மயக்க மருந்து கொடுத்து வனப்பகுதிக்குள் கொண்டு விட தயாராகியுள்ளனர்.இதன் மூலம் அச்சத்தில் இருந்துவந்த உடுமலை பகுதி மக்கள் நிம்மதியுடனும்,மகிழ்ச்சியுடனும் சின்னத்தம்பியை வழியனுப்பிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து