முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நடந்த முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ - ஊரடங்கு உத்தரவு அமல்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : பயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு நடந்தது. இதில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. நிலைமை கட்டுக்கு அடங்காத நிலையில், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்முவில் நேற்று முழு அடைப்பு நடத்த தொழில் வர்த்தக சபை அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு போக்கு வரத்து நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், வக்கீல்கள் சங்கம், டீம் ஜம்மு அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. 
காஷ்மீரின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு   கண்டன பேரணி நடத்தினர். அவர்கள் பாரத மாதாவுக்கு ஜே, வந்தே மாதரம் என கோஷங்களை முழங்கினர்.

ஜம்முவின் பல பகுதிகளிலும் தேசியக்கொடிகளை அசைத்த பொதுமக்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. 
வாகனங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

இளம் சிறுத்தைகள் அமைப்பினர் அதன் மாநில துணைத்தலைவர் பிரதாப் சிங் ஜம்வால் தலைமையில் கண்டன பேரணி நடத்தினர். அவர்கள் அங்கு தாவி பால சாலையில் தடைகளை ஏற்படுத்தினர். கோஷங்களை முழங்கியவாறு பாகிஸ்தான் உருவப்பொம்மையை தீயிட்டு எரித்தனர்.

தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து, வன்முறை சம்பவங்கள் நடந்ததை அடுத்து நிலைமை கட்டுக்குள் அடங்காதபோது, ஜம்மு நகரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

ஜம்முவில் நடந்த போராட்டங்களில் 3 போலீசார் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன் இணையதள சேவை முடக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து