முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : அடுத்த இரண்டு பொதுத்தேர்தல்களுக்கு பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டதாக மராட்டிய மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து  கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பிரபல நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் எழுப்பிய கேள்விக்கு பட்னாவிஸ் பதில் அளித்தார்.

மகிழ்ச்சி அடைவேன்

சரத் பவார், நிதின் கட்காரி உட்பட மராட்டிய மாநிலத்தில் இருந்து யாரால் பிரதமராக வர முடியும்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பட்னாவிஸ், இந்த கேள்வியே எழ வேண்டியதில்லை. ஏனெனில், பிரதமர் பதவி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டது. இந்த ஆண்டு தேர்தலுக்கு மட்டும் இல்லை. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கும் பதிவு செய்யப்பட்டு விட்டது. இருந்த போதிலும், இந்த கால கட்டத்திற்கு பிறகு, மராட்டிய மாநிலத்தில் இருந்து யாரேனும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து,  மராட்டியத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்  சிவசேனா, பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் சம எண்ணிக்கையில் வெற்றி பெற்றால், எந்த கட்சி முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை கோரும் என்று மற்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு  பதிலளித்த பட்னாவிஸ், அனைத்தையும் இந்த நேரத்தில் வெளியிட முடியாது என்றார்.

அரசியல் எதார்த்தம்

அதே போல், 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் 144 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. போட்டியிடுவதால், கட்சித் தொண்டர்கள் மன வருத்தத்தில்  இருப்பதாக வெளியாகும் தகவலை மறுத்த தேவேந்திர பட்னாவிஸ், எங்களின் பழமையான கூட்டணி கட்சியான சிவசேனாவுடன் கூட்டு வைப்பது அவசியமானது. எதிரெதிர் கட்சிகளும் எங்களுக்கு எதிராக கூட்டணி அமைத்து போட்டியிடும் தற்போதைய சூழலில் இதுதான் அரசியல் எதார்த்தம். இதை, எங்களின் தொண்டர்களும் புரிந்து கொண்டு, எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து