முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் எதிர்க்கட்சியினரின் அத்துமீறல்கள் பற்றி தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யுங்கள்: அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு பணியில் எதிர்க்கட்சியினரின் அத்துமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில்,

பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போனவர்களின் பெயர்களை சேர்த்து கொள்வதற்கு மேலும் ஒரு வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற 23, 24 ஆகிய இரண்டு நாட்களில், வாக்குச் சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், ஒன்றியம் / நகரம் / பேரூராட்சி / பகுதி / ஊராட்சி / கிளை / வார்டு மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும், குறிப்பாக, அ.தி.மு.க. சார்பில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை முகவர்களும் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிவந்துள்ளவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வது, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வது, சம்பந்தப்பட்ட தொகுதிக்குள்ளேயே இடமாறுதல் செய்வது போன்ற பணிகளை அவற்றுக்கான படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்கி இப்பணியை முழுமையாக செய்து முடித்திட வேண்டும்.

அதே போல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் எதிர்க்கட்சியினரின் அத்துமீறல்கள் இருப்பதாக தெரிய வந்தால், உடனுக்குடன் அது தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து