முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டாம்: அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை. பணிச்சுமை காரணமாக ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தாமல், மற்ற அரசு ஊழியர்களையும் கிராம நிர்வாக அதிகாரிகளையும் ஈடுபடுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தினார்.

9 கட்சிகள்...

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு முகாம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது. கடந்த ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் போன்றவற்றுக்காக தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாமில் அரசியல் கட்சிகளின், வாக்குச்சாவடி அளவிலான முகவர்களின் ஒத்துழைப்பை கோருவதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து பேச முடிவு செய்யப்பட்டது. அதன்படி தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ. தி.மு.க. பா.ஜ.க. காங்கிரஸ், தி.மு.க., தே.மு.தி.க., தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட் ஆகிய 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க. பங்கேற்பு

தலைமைத் தேர்தல் அதிகாரியின் அழைப்பை ஏற்று 9 கட்சி பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அ.தி.மு.க. சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஐ.எஸ். இன்பதுரை, பா.ஜ.க. சார்பில் சவுந்தரராஜன், காங்கிரஸ் சார்பில் பொன் கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், தி.மு.க. சார்பில் கிரிராஜன், ம.தி.மு.க. சார்பில் இளங்கோவன், மோகன்தாஸ், கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, எஸ்.ஏழுமலை, மார்க்சிஸ்ட் சார்பில் ஆறுமுக நயினார், உதயகுமார், பகுஜன் சமாஜ் சார்பில் பாரதிதாசன், மாணிக்கராஜ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சாரதி, அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை அரசியல் கட்சியினரும் வழங்கலாம். அவற்றை வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து விட்டு, அதில் உண்மைத் தன்மை இருக்கும் பட்சத்தில் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியது குறித்து அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளரும், சட்டசபை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷன் நடத்திய கூட்டத்தில் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதே கோரிக்கைகளை மற்ற கட்சிகளும் வலியுறுத்தின. குடிநீர் திட்டப் பணிகள் போன்ற அத்தியாவசிய பணிகளை தேர்தல் காரணம் காட்டி தடை செய்யக் கூடாது என்றும் அத்தியாவசிய மக்கள் பணிகளையும் தடை செய்யாமல் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

கிராம நிர்வாக அதிகாரிகள்...

ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் காரணத்தால் தேர்தல் பணிகளில் அனைத்துத் தரப்பு அரசு ஊழியர்களையும் ஈடுபடுத்த வேண்டும். ஆசிரியர்களின் பணிச் சுமையை குறைக்க கூட்டுறவுத்துறை ஊழியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், கிராம பஞ்சாய்த்து அலுவலர்களையும் நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதையே மற்ற கட்சிகளும் கேட்டுக் கொண்டன. எங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி,  அதற்கான வாய்ப்பு என்ன என்பதை வெளியிடுவதாக தேர்தல் அதிகாரி கூறினார் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து