தேனியில் ரூ.368.76 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2019      தேனி
3 ops news

தேனி, -தேனி மாவட்டத்தில் ரூ.368.76 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.76.15 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான மதிப்பீடு மற்றும் ஆண்டு பராமரிப்புப் பணிக்காக ரூ. 40.80 லட்சம் செலவில் குடிநீர் திட்டப் பணிகளையும, போடிநாயக்கனூர் வலசுத்துறையில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் 11 பகுதிகளில் ரூ.287.86 கோடி மதிப்பீட்டில் 2925 குடியிருப்புகள்  கட்டுமானப்பணிகளையும், ரூ.435.13 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டவுள்ள நடைபாதையில் கற்கல் பதித்தல், தார் சாலை மற்றும் தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில், துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் உத்தரவின்படி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில், சுற்றுச்சூழல் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் போடி-மீனாட்சிபுரம், பூதிப்புரம், குச்சனூர், மார்க்கையன்கோட்டை, பழனிசெட்டிபட்டி கோம்பை, தாமரைக்குளம், வீரபாண்டி, வடுகபட்டி மற்றும் மேலச்சொக்கநாதபுரம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 56 குடிசைப் பகுதிகளில் சிமிண்ட் நடைபாதையில் கற்கல் பதித்தல், தார் சாலை மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் ரூ.435.13 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் ஆடசேபகரமான அரசு புறம்போக்கு மற்றும் ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் வசத்து வரும், ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 2925 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 287.86 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு பயனாளிகள் ஒரு குடியிருப்பிற்கு கட்டுமானத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள தொகையை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு செலுத்திட வேண்டும்
அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் - சிக்காட்சி அம்மன் கோவில் மேடு பகுதியில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.47.99 கோடி மதிப்பீட்டிலும், தேவதானப்பட்டி – பளியங்குடி மலைவாழ் காலனியில் 35 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.3.50 கோடி மதிப்பீட்டிலும், தேனி, வடவீரநாயக்கன்பட்டியில் 312 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.31.17 கோடி மதிப்பீட்டிலும், தேனி, குறவர்கள் காலனியில் 175 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.16.63 கோடி மதிப்பீட்டிலும், சின்னமனூர் - அப்பிபட்டி, அழகாபுரி ஆகிய பகுதிகளில் 432 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.43.13 கோடி மதிப்பீட்டிலும், தேனி - தப்புக்குண்டு பகுதியில் 431 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.43.02 கோடி மதிப்பீட்டிலும், கூடலூர் - தம்மனம்பட்டி பகுதியில் 240 அடுக்குமாடி குடியிருப்பு ரூ.23.98 கோடி மதிப்பீட்டிலும், கூடலூர் - மேகமலை டிரைபல் காலனியில் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.6.00 கோடி மதிப்பீட்டிலும், போடிநாயக்கனூர் - பரமசிவன் கோவில் தெரு 168 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.16.77 கோடி மதிப்பீட்டிலும்,  போடிநாயக்கனூர் - முன்சிபல் காலனியில் குடியிருப்புகள் 352 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.31.68 கோடி மதிப்பீட்டிலும், போடி-மீனாட்சிபுரத்தில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.23.99 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 11 பகுதிகளில் 2925 குடியிருப்புகள் ரூ.287.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன.
இக்குடியிருப்புகள் அனைத்தும் போதிய வசிப்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதிகளுடன் போதுமான காற்றோட்டம் மற்றும் தண்ணீர் வசதியுடன் கட்டப்பட உள்ளது. இதுதவிர. இத்திட்டப்பகுதியில் மழைநீர் வடிகால், குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு, பேவர் பிளாக் நடைபாதை, ஆழ்துளை கிணறு, நியாய விலைக்கடை மற்றும் சிறு அங்காடிகள் குடியிருப்பவர்களின் வசதிக்காக கட்டப்பட உள்ளது. குடியிருப்பு கட்டுமானப்பணிகள் 15 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு தையல், மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரசு உத்தரவின்படி, போடிநாயக்கனூர் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான மதிப்பீடு ரூ 76.15 கோடி மற்றும் ஆண்டு பராமரிப்புப் பணிக்காக ரூ. 40.80 லட்சம் செலவில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. போடிநாயக்கனூர் நகராட்சிக்கு தேவையான மொத்த உச்சக்கட்ட குடிநீர் அளவு 15.82 மில்லியன் லிட்டர் என்று கணக்கிட்டு  விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக குரங்கனி கிராமத்துக்கு அருகில் குரங்கனி சாம்பலாறு காட்டாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை அமைத்து அங்கிருந்து தன்னோட்ட குழாய்கள் மூலம் நாளொன்றுக்கு  15.82  மில்லியன் லிட்டர் இயல்நீர் கொண்டு செல்லப்பட்டு பழைய சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் புதிதாக சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு பழைய மேல்நிலைத் தொட்டி மற்றும் 4 புதிதாக அமையவிருக்கும் மேல்நிலைத் தொட்டிகளுக்கு 12.75 கி.மீ. தொலைவிற்கு நீரேற்றும் குழாய்கள் அமைத்து எடுத்துச் செல்லப்பட உள்ளது.  மேலும் 94.889 கி.மீ. பகிர்மானக் குழாய்கள் அமைக்கவும் மற்றும் 19607 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கிடவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தேனி எம்.பி. ஆர். பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, உத்தமபாளையம் வருவாய் கோட்ட சார் ஆட்சியர் வைத்தியநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அசோகன், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய செயற்பொறியாளர் முனியசாமி, முன்னாள் தேனி எம்.பி. எஸ்.பி.எம். சையதுகான், மாவட்ட கோ - கோ விளையாட்டு கழகத் தலைவர் ஓ.ப. ரவீந்தர்நாத்குமார், உதவி செயற்பொறியாளர் எம்.பி.அன்சாரி, உதவி பொறியாளர் வி.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து