முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1, 300 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னையில் நடைபெற்ற விழாவில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 1300 டாக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை, எழும்பூர், மகளிர் மகப்பேறு நோயியல் நிலையம் மற்றும் அரசு மகளிர் மற்றும் சிறார் நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

வறுமைக் கோட்டின் கீழ் உள்ள கருவுற்ற பெண்களுக்கு பேறு காலத்தில் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டவும், சத்தான உணவை உட்கொள்ளவும், அதன் மூலம் எடை குறைவான குழந்தைகள் பிறப்பதை தடுக்கும் வகையிலும், தாய் மற்றும் குழந்தையின் சுகாதார நிலையை மேம்படுத்தும் உயர்ந்த நோக்கத்துடன் கர்ப்பிணி பெண்களுக்காக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நான் முதலமைச்சராக பதவியேற்றவுடன் இத்திட்டத்தில் வழங்கப்படும் நிதியுதவியை 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி நான் ஆணையிட்டேன். கடந்த எட்டு ஆண்டுகளில் இத்திட்டத்தில் 56.36 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4 ஆயிரத்து 866 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடப்பு ஆண்டில் புதிதாக 508 முதுநிலை மருத்துவ மேற்படிப்பு இடங்கள் நமது மருத்துவக் கல்லூரியில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1758 முதுநிலை மருத்துவ மேற்படிப்பு இடங்கள் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதன்மை வகிக்கின்றது என்ற பெருமையான செய்தியை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையிலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவலாக உள்ள ரத்த சோகையைப் போக்கவும், பிறந்த குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும், 4,000 ரூபாய் மதிப்புள்ள இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து பொருட்கள் அடங்கிய அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று 2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, இன்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்கி இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்பெறுவார்கள். இதனால் தமிழ்நாட்டில் பேறுகால தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகித குறியீடுகள் மேலும் குறையும்.

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் அவ்வப்போது புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பும் பொருட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாரியம் இதுவரை 11,003 மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள் உட்பட 24,736 பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது 1,883 மருத்துவர்களை தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் 1,300 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதை நான் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக துவக்கி வைத்துள்ளேன். இது தவிர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு செய்யப்பட்ட 129 இளநிலை உதவியாளர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதை நான் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக துவக்கி வைத்துள்ளேன்.

பணி ஆணை பெறுகின்ற மருத்துவர்களும், அமைச்சுப் பணியாளர்களும் மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவை என்பதை நினைவில் கொண்டு சிறந்த முறையில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்று பணி ஆணை பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ், தாய்சேய் நலப் பணிகளை திறம்பட செயல்படுத்தி வரும் 9,994 சுகாதார செவிலியர்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கப்படும் என்று 2017-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி நான் அறிவித்தேன். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு, இன்று 11,068 கிராம சுகாதார செவிலியர்களுக்கும், தொற்றா நோய் தடுப்பு, கட்டுப்படுத்தல் மற்றும் சிகிச்சை திட்டத்தில் பணியாற்றும் 2,341 செவிலியர்களுக்கும், 20 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கையடக்க கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து