முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, வண்டலூரில் இன்று நடக்கிறது: அ.தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - பிரதமர் மோடி - முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை, வண்டலூரில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

அ.தி.மு.க. தலைமையில்...

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. முன்னதாக அ.தி.மு.க., தலைமையிலான அணியில் கூட்டணி கட்சிகளான பா.ம.க.வுக்கு 7 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 5 இடங்களும், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சிக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. விஜயகாந்தின் தே.மு.தி.க.வும் இந்த கூட்டணியில் சேரும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசாரக் கூட்டம்

இந்த நிலையில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை கடந்த மாதமே தொடங்கி விட்டனர். மாநிலம், மாநிலமாக சென்று அவர்கள் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி ஏற்கனவே 3 தடவை தமிழகம் வந்து மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி பொதுக்கூட்டங்களில் பேசினார். தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கும் முன்பு மீண்டும் ஒரு தடவை பிரதமர் மோடியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்தனர்.

ஏற்பாடுகள் தீவிரம்

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். இந்த தடவை மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கான இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தின் போது சில அரசு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதை கருத்தில் கொண்டு அரசு திட்டங்கள் விழாவுக்கு தனி மேடையும், பிரசாரம் செய்வதற்கு தனி மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டு வருகின்றன.

உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கர்நாடகா வருகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிறகு பெங்களூரில் இருந்து விமானத்தில் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறப்பட்டு செல்கிறார். அங்கு மாலை 4.30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். சுமார் 2 மணி நேரம் அவர் சென்னை கூட்டத்தில் இருப்பார் என்று தெரிகிறது. மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 6 மணிக்கு பிரதமர் மோடி சென்னையில் இருந்து டெல்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு செல்வார்.

தலைவர்கள் பங்கேற்பு

சென்னையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கிறார்கள். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் கலந்து கொள்ள உள்ளார். தே.மு.தி.க.வுடன் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்க வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் கூடுவதால் சென்னை கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து