முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 3-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

வியாழக்கிழமை, 7 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : ராஞ்சியில் இன்று நடைபெற இருக்கும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

சுற்றுப்பயணம்...

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முன்னிலை...

தற்போது நடைபெற்று வரும் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை நடந்த இரண்டு ஆட்டத்திலும் இந்தியா வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 ரன்னிலும் வெற்றி பெற்றது.

3-வது ஒருநாள்...

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

விஜய் சங்கர்... 

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இந்திய அணி திகழ்கிறது. கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் பேட்டிங்கிலும் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது‌ ஷமி ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். தமிழக வீரர் விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்படுகிறார். கடந்த போட்டியில் கடைசி ஓவரில் அவரது நேர்த்தியான பந்து வீச்சால் வெற்றி கிடைத்தது.

ஆஸி.க்கு நெருக்கடி...

தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது. இதனால் அந்த அணி வீரர்கள் அனைவரும் கடுமையாக போராடுவார்கள. ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், கம்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

134-வது ஆட்டம்...

இரு அணிகளும் இன்று மோதுவது 134-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 133 போட்டியில் இந்தியா 49-ல், ஆஸ்திரேலியா 74-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ராஞ்சி மைதான கண்ணோட்டம்

* ராஞ்சி மைதானத்தில் 2013-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. கடைசியாக 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இங்கு நடந்த போட்டியில் இந்திய அணி 19 ரன்னில் நியூசிலாந்திடம் தோற்றது.
* இந்திய அணி இங்கு 4 ஆட்டத்தில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோற்றது. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
* ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்து இருந்தது. இங்கிலாந்து அணி 155 ரன்னில் சுருண்டதே குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.
* விராட் கோலி 3 இன்னிங்சில் 261 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். கோலி, இலங்கை வீரர் மேத்யூஸ் ஆகியோர் ஒரு ஆட்டத்தில் அதிகபட்சமாக தலா 139 ரன் குவித்துள்ளனர்.
* அஸ்வின் 3 ஆட்டத்தில் 6 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இலங்கை வீரர் மெண்டிஸ் 73 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து