குருவிக்காக போர் நடத்திய மன்னர்கள் : டி கல்லுப்பட்டி அருகே நடை பெற்ற பாரம்பரிய படுகளம் திருவிழா: பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2019      மதுரை
8 tmm news

 திருமங்கலம். -  மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காரைக்கேணி கிராமத்தில் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு குருவிக்காக மன்னர்கள் நடத்திய போரின் நினைவாக நடத்தப்பட்ட பாரம்பரியம் மிக்க படுகளம் திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு  வழிபாடு நடத்திச் சென்றனர்.
 மதுரை மாவட்டம்  திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி அருகேயுள்ளது காரைக்கேணி கிராமம். இங்கு சுமார் 500 ஆண்டுக்கு முன்பு தென்னந்தோப்பு என்ற நாட்டை குணசீலன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். அதே போல்
கவசகோட்டை என்ற நாட்டை சத்தியவேந்தன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். இவ்விரு மன்னர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடப்பது வழக்கம்.
ஒருமுறை மன்னன் குணசீலன் வேட்டைக்கு சென்றபோது வல்லத்தான் குருவியை விரட்டி சென்று வில்லால் அடித்தார். அதில் அடிபட்ட குருவி கவசகோட்டை நாட்டுக்குள் விழுந்தது. இந்த குருவியை மன்னன் குணசீலன் எடுக்க சென்றபோது கவசகோட்டை மன்னர் தடுத்துள்ளார்.
 குருவியால் ஏற்பட்ட இந்த பிரச்சனை குறித்து காரைக்கேணி நாட்டு அரசர் அரசுதேவர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. அதில் மன்னர்கள் இரண்டு பேரும் நேருக்கு நேர் போரிட வேண்டும். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த குருவி அவருக்கே சொந்தம் என்று பஞ்சாயத்து பேசப்பட்டது.
இதையடுத்து தென்னந்தோப்பு அரசர் குணசீலன் தனது மனைவியான ராணியிடம் சண்டைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்படும் முன்பு ஒரு ஆட்டை கத்தியால் குத்தி குடலை உருவி அதை ஆட்டின் கொம்பிலேயே கட்டியும்,சேவலை துணியால் போர்த்தி கத்தியால் குத்தி குடலை உருவியுள்ளார்.
 இந்த  ஆடும், சேவலும் உயிருடன் இருந்தால் தான் நான் போரில் வெற்றி பெற்று திரும்புவேன். இவைகள் இறந்து விட்டால் நானும் இறந்து விட்டதாக கருதிக் கொள் என்று ராணியிடம் கூறிவிட்டு சண்டைக்கு சென்றுள்ளார்.
அப் போரில் தென்னந்தோப்பு மன்னர் குணசீலன் சண்டையில் கொல்லப்பட்டார். மன்னர் வாரிசுகளில் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் ஒரு குதிரை வீரரும் எஞ்சிய மன்னரின் வாரிசும் தப்பி விடுகின்றனர். இருப்பினும் ஆடும், சேவலும் இறந்து விடுகின்றன.
  500 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த பாரம்பரிய  நிகழ்வினை நினைவூட்டும் விதமாக காரைக்கேணி மக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த படுகளத் திருவிழாவை நடத்துகின்றனர். தப்பிப் பிழைத்த குதிரை வீரரின் வாரிசுகள் தான் இந்த விழாவை நடத்துகின்றனர் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற படுகள திருவிழாவில் இரு நாட்டு மன்னர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் கம்புகளால் சிலம்பாட்டம் நடத்தி ஒருவருக் கொருவர் மோதிக் கொண்டனர்.
 அப்போது போரில் உயிர் நீத்திடும் வீரர்களை தூக்கி வந்து தங்க கோட்டை கோவில் முன் வரிசையாக படுக்க வைத்தனர். பின்னர் போரில் வெற்றி பெற்ற கவசகோட்டை மன்னன் சத்திய வேந்தன் மற்றும் அவரது வீரர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்ற நிகழ்ச்சிகள் தத்ரூபமாக நடத்திக் காட்டப்பட்டது.இந்த பாரம்பரியம் மிக்க படுகள விழாவினை கண்டு களிக்க சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து