பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு: அ.தி.மு.க. - த.மா.கா. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

புதன்கிழமை, 13 மார்ச் 2019      தமிழகம்
EPS-OPS-Vasan 2019 03 13

சென்னை : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி இறிதியானதை அடுத்து அடுத்து 20 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.

கூட்டணி கட்சிகள்...

வரும் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான  கூட்டணியில் முதலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்பந்தம் மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், தே.மு.தி.கவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கூட்டணியில் இணைந்தது...

இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஞானதேசிகன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே சென்னை அடையாறில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சந்தித்து, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் இணைவது உறுதியானது.

ஒரு தொகுதி ஒதுக்கீடு...

அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கான கூட்டணி ஒப்பந்தத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் கையொப்பமிட்டனர். இதன்மூலம் அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.


அ.தி.மு.க. கூட்டணி நிலவரம்:-

அ.தி.மு.க. - 20 தொகுதிகள்.
பா.ம.க.   - 7 தொகுதிகள்.
பா.ஜ.க.   - 5 தொகுதிகள்.
தே.மு.தி.க. - 4 தொகுதிகள்.
புதிய தமிழகம் - 1 தொகுதி .
புதிய நீதிக்கட்சி - 1 தொகுதி.
த.மா.கா. - 1 தொகுதி .
என்.ஆர்.காங்கிரஸ் - 1 தொகுதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து