உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்து அணிக்கு கூடுதல் சாதகம் - மைக்கேல் வாகன் பேட்டி

புதன்கிழமை, 13 மார்ச் 2019      விளையாட்டு
Michael Vaughan 2019 03 13

லண்டன் : 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. கடந்த நான்கு வருடங்களாக ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி முதன்முறையாக 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்து அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என முன்னாள் வீரரும், டிவி வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

பயமின்றி விளையாட...

இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘2011 மற்றும் 2015 உலகக்கோப்பை தொடர்களை பார்த்தீர்கள் என்றால், போட்டியை நடத்திய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள்தான் கோப்பையை தட்டிச் சென்றது. அதேபோல் தற்போது இங்கிலாந்துக்கு சொந்த மண் சாதகமாக இருக்கும்.

மோர்கன் மிகவும் தலைசிறந்த கேப்டனாக திகழ்கிறார். கடந்த நான்கு வருடங்களாக அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றுள்ளார். கடந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து விளையாடிய விதத்தை பார்த்தீர்கள் என்றால், அது வரலாற்றுக்கு முந்தைய பகுதி. நாங்கள் தவறான அதிகாரிகளுடன் சென்றோம். அதன்பின் மோர்கன் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார். ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் கலாசாரத்தை மாற்றினார். எந்தவித பயமின்றி விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை கையாண்டனர். இதனால் அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதைவிட சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

தயாராக இருக்கிறோம்

இங்கிலாந்து அணி தற்போது உலகின் சிறந்த அணியாக திகழ்கிறது. இதை கடந்த நான்கு வருடங்களாக நிரூபித்துள்ளனர். ஆனால் இன்னும் சில அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி தற்போது சில வீரர்களை இணைத்து நல்ல நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். விராட் கோலியோடு இந்திய அணி நாங்களும் தயாராக இருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது. இரண்டு அணிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னால், இந்தியா அல்லது இங்கிலாந்து என்பதை உறுதியாகச் சொல்வேன்.

இரண்டு வருடத்திற்கு முன் சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆகவே, சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் சாதகமாக இருக்கும். ஆனால், சொந்த மண்ணில் விளையாடும்போது கூடுதலாக நெருக்கடியும் ஏற்படும்’’ என்றார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து