காரணமாக எதுவும் கூறமுடியாது: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வியை ஏற்றுக்கொண்ட கோலி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      விளையாட்டு
virat kohli interview 2019 03 14

புதுடெல்லி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தோல்விக்கு காரணமாக எதுவும் கூறமுடியாது என விராட் கோலி தோல்வியை ஒப்புக்கொண்டார்.

காவஜா அபாரம்...

இந்தியாவிற்கு எதிரான தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளனர். இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் காவஜா 100 (106) ரன்கள் எடுத்தார். மற்றொரு பேட்ஸ்மேனான பீட்டர் ஹண்ட்ஸ்கோம்ப் 52 (60) ரன்கள் சேர்த்தார்.

தொடரை...

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா 56 (89), புவனேஷ் குமார் 46 (56) மற்றும் கேதர் ஜாதவ் 44 (57) ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய கைப்பற்றியது. அந்த அணியில் சதம் அடித்த காவஜா ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தகுதியானவர்கள்...

பின்னர் பேசிய இந்தியக் கேப்டன் விராட் கோலி, “இது எட்டக்கூடிய இலக்கு தான் என்று நினைத்தோம். கடைசி நேரத்தில் அவர்கள் எங்களை விட கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டுவிட்டனர். ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் மொத்த போட்டியையும் மாற்றிவிட்டது. ஆனால், ஆஸ்திரேலியா வழக்கத்தைவிட சிறப்பாக விளையாடினார்கள். வெற்றி பெறவேண்டும் என்ற பசியுடனும், இதயப்பூர்வகாமவும் விளையாடினர். அவர்கள் இக்கட்டான நேரத்திலும் துணிச்சலான முடிவை எடுத்தார்கள். எனவே இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான்.

ஆலோசனைகள்...

இந்தப் போட்டியில் நாங்கள் பனி குறித்து எதுவும் நினைக்கவில்லை. ஏனென்றால், அதை எப்படியும் நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. இந்த தொடரில் தோல்விக்கு நாங்கள் எந்த காரணமும் முன்வைக்க முடியாது. பல மாதங்களாக தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்பதில் பெருமைப் படுகிறேன். அணியின் வீரரக்ள் உலகக் கோப்பையில் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். எங்கள் தரப்பில் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. அது சில ஆலோசனைகள் தான்” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து