முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்ம விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கிய 106 வயது கேரள பெண்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பத்மஸ்ரீ விருது பெற்றுக் கொண்ட 106 வயது பெண், ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் முதற்கட்டமாக சிலருக்கு கடந்த 11-ம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்த விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 106 வயதான சாலுமரதா திம்மக்கா என்ற முதிய பெண்மணியும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வந்திருந்தார். அங்கு அவர் விருதுக்காக அழைக்கப்பட்ட போது ஜனாதிபதியை நோக்கி புன்சிரிப்புடன் வந்தார். அவரிடம் பத்மஸ்ரீ விருதை வழங்கிய ஜனாதிபதி, புகைப்படம் எடுப்பதற்காக போஸ் கொடுக்குமாறு கூறினார். ஆனால் அந்த பெண் திடீரென ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜனாதிபதி, தலைகுனிந்து திம்மக்காவின் அந்த எளிய அன்பை ஏற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி மாளிகையின் நடை முறைகள் மற்றும் விதிகளை மீறி திம்மக்கா செய்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கில் இருந்த பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது. எனவே அவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி திம்மக்காவை பாராட்டினர்.

கர்நாடகாவின் குலிக்கல் கிராமத்தை சேர்ந்த திம்மக்கா தனது கணவருடன் இணைந்து ஏராளமான மரங்களை நட்டு வளர்த்துள்ளார். குழந்தைகள் இல்லாததால் இளம் வயதில் தற்கொலைக்கு முயன்ற அவர், பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு மரம் வளர்ப்பில் கவனத்தை செலுத்தினார். இவ்வாறு கடந்த 65 ஆண்டுகளில் 400 ஆலமரங்கள் உள்பட 8 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை திம்மக்கா நட்டு வளர்த்து இருக்கிறார். மரங்களை வெறுமனே நட்டு விட்டு செல்லாமல் அவற்றை தொடர்ந்து பராமரித்தும் வந்திருக்கிறார் திம்மக்கா. இதற்காக 4 கி.மீ. தொலைவு வரை சென்று தண்ணீர் சேமித்து வந்து அரிய சேவையில் ஈடுபட்டு உள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டு அவரது கணவர் மரணமடைந்தார். எனினும் திம்மக்காவின் மரங்கள் மீதான காதல் தொடர்ந்தது. திம்மக்காவின் இந்த சேவைக்காக அவரை மரங்களின் தாய் என்றே அனைவரும் அழைத்து வருகின்றனர். இந்த அரிய பணிகளுக்காகவே அவருக்கு பத்மஸ்ரீ விருதும் தேடி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து