முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி தமிழகத்தில் இன்று துவங்குகிறது - துணை ராணுவப் படையினர் - போலீஸ் அணிவகுப்பு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ள இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

வேட்பாளர்கள் பட்டியல்

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறுதல், அதனையடுத்து நேர்காணல், இறுதியாக வேட்பாளர் பட்டியல் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டு அந்த பணி நிறைவு பெற்று தேர்தல் அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. பார்லிமெண்ட் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

வேட்பு மனு தாக்கல்...

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணைப்படியே ஏப்ரல் 18-ம் தேதி நடக்க உள்ளது. அந்த தொகுதிகளுக்கும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தமட்டில் வடசென்னை தொகுதிக்கு சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையாளர் திவ்யதர்ஷினியும், தென்சென்னை தொகுதிக்கு தெற்கு வட்டார துணை ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசும், மத்திய சென்னை தொகுதிக்கு மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என்.ஸ்ரீதரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கென தனியாக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எங்கு வேட்பு மனு தாக்கல் ?

வடசென்னை தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டை பேசின் பாலம் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும், தென்சென்னை தொகுதிக்கு அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கு செனாய்நகர் புல்லா அவென்யூ, 2-வது குறுக்கு தெருவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி கருணாகரன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வியாசர்பாடி சர்மாநகர் 2-வது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு...

வேட்புமனுக்கள் பெறப்படும் இடங்களில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் பலபகுதிகளில் நேற்று துணை ராணுவப் படையினர் மற்றும் ராணுவத்தினர் கலந்து கொண்ட அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. அவர்களோடு தமிழக போலீசாரும் இணைந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

27-ம் தேதி பரிசீலனை

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 27-ம் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற 29-ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும். நாடு முழுவதும் உள்ள 90 கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் 7 கட்ட தேர்தல் முடிவடைந்ததும், மே மாதம் 23-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து