முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியாகிறது - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வெளியிடுகின்றனர்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று காலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிடுகின்றனர்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் எம்.பிக்கள். மனோஜ்பாண்டியன், ரபிபெர்னாட் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அ.தி.மு.க. வரைவு தேர்தல் அறிக்கையை தயாரித்து அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் ஒப்படைத்தது. அதை முதல்வரும் துணை முதல்வரும் ஆய்வு செய்து இறுதி செய்தனர்.

தீவிர ஆலோசனை...

இதற்கிடையே அ.தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் நேற்று முன்தினம் வெளியானது. இந்தநிலையில் நேற்று, அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தேர்தல் அறிக்கை யில் புதிதாக சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை, இன்று காலை 10.15 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதனை அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் வெளியிடுகின்றனர்.

கடந்த தேர்தலில்...

இந்த தேர்தல் அறிக்கையில் தமிழக மக்களின் நலன்களுக்கான பல்வேறு புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல கிராமப்புற ஏழை பெண்களுக்கு ஆடு மாடுகள் வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தார். அதன் மூலம் லட்சக்கணக்கான ஆடுகள் மாடுகள் வழங்கப்பட்டது. சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்றும் அறிவித்து ஜெயலலிதா நிறைவேற்றினார். மேலும் மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தையும் அறிவித்து தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றி சாதனை படைத்தார்.

முக்கிய அறிவிப்புகள்...

இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், நெசவாளர்கள், கிராமப்புற பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கான மிக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து