முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை - மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் - அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை: ஓ.பி.எஸ். வெளியிட இ.பி.எஸ். பெற்றுக் கொண்டார்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அ.தி.மு.க. பாராளுமன்றத்திற்கான தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கங்கை - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

56 பக்க அறிக்கை

பாராளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் நேற்று காலை வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட அதனை அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார். 56 பக்கங்கள் கொண்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. வண்ண வடிவமைப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளது. 38 அத்தியாயங்களை கொண்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கினார். அதன் விபரம் வருமாறு:-

நாடு முழுவதும்...

நாடு முழுவதும் வாழுகின்ற வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கும், தங்கள் அடிப்படை வசதிகளை நிறைவு செய்திடத் தேவையான வருமானம் இன்றி அல்லலுறும் மக்களுக்கும் மாதந்தோறும் எவ்வித நிபந்தனையும் இன்றி ரூபாய் 1,500 வழங்கும் அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர், கைவிடப்பட்ட பெண்கள், வருமானமற்ற விதவைப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளர்கள், கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் உடலுழைப்பு தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர் ஆகியோருக்கு மாதம் தோறும் ரூபாய் 1,500 உதவித் தொகையை நேரடியாக அவர்தம் வங்கிக் கணக்கில் செலுத்தும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை  நாடு முழுவதும் செயல்படுத்த அ.தி.மு.க. அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.

பிலிப்பைன்ஸ் பாணியில்...

எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் டெஸ்டா நிறுவனம், அந்த நாட்டின் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் உலகெங்கும் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வண்ணம் வழங்கி வரும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மாதிரியாகக் கொண்டு நம் நாட்டிலும் புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்கி இந்தியஇளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் திறன் மேம்பாடு அளிக்கவும், அத்தகைய பயிற்சிகளைப் பெற்றோர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெறுவதை எளிதாக்கிடவும் புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில் உருவாக்கப்பட அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தும்.

காவிரி - கோதாவரி இணைப்பு

காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த, மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெருமழை வெள்ளக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்தி, நிதி ஆதாரத்தைப் பெற்று, விரைந்து செயல்படுத்த அ.தி.மு.க. நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை

நொய்யல் ஆற்றையும், மேற்கு தொடர்ச்சி மலையையும் மையமாக கொண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் பருவ மழைக் காலங்களில் பெறப்படும் மழை, வெள்ள நீரை கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியப் பகுதி மற்றும் மதுக்கரை வனச்சரகம் வெள்ளப்பதி பிரிவு நண்டக்கரை, முண்டன் துறை,கோவை புதூர், போளுவாம்பட்டி வனச் சரகம், நரசீபுரம், தாளியூர் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் தடுப்பணைகளை அமைத்தும், குளம் குட்டைகளில் மழை நீரை நிரப்பியும், நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம், காவேரி ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும் மோகனூர் தடுப்பணையில் இருந்து நாமக்கல் மாவட்டத்தின், மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பயன் பெறும் வகையில், காவேரி (கட்டளை கதவணை), அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம். மாணவ, மாணவியர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதற்கு தேசிய மயமாக்கப்பட்டவங்கிகளிலும், மற்ற வங்கிகளிலும் பெற்றுள்ள கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.

கடன் சுமையை நீக்க...

வேளாண்மை கடன்களால் அல்லலுறும் விவசாயிகளுக்கு அவர்தம் கடன் சுமையை நீக்கும் வகையில் உறுதியான திட்டம் ஒன்றினை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசை அ.தி.மு.க வலியுறுத்தும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தும். மருத்துவம் போன்ற உயர்கல்வியில் சேர நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தும். தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்கப்படும் வகையில் தனியார் துறைகளின் வேலைவாய்ப்புகளிலும், இடஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி. சி.வி.சண்முகம், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், செம்மலை, அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

* அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்கப்படும்
* வறுமையில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
* பிலிப்பைன்ஸ் நாட்டை முன்மாதிரியாக கொண்டு எம்ஜிஆர் தேசிய திறன் மோம்பாடு திட்டம் அமைக்கப்படும்
* காவிரி-கோதாவரி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
* கடலில் வீணாக நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
* மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
* நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்
* தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்
* கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
* இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்படும்.
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரைவும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்படும்
* பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்படும்
* தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
* காவிரி டெல்டாவை பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* மதம் மாறினாலும் சாதி ரீதியிலான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க புதிய சட்டம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து