முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்களாச்சேரி அரசுப்பள்ளியில் சிட்டுக்குருவிகளுக்கான செயற்கை வீடு கட்டித்தரும் பயிற்சி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

புதன்கிழமை, 20 மார்ச் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தங்களாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகளுக்கான செயற்கை வீடுகள் கட்டித்தரும் பயிற்சி நடத்தப்பட்டது.இதில் ஏராளமான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிட்டுக்குருவிக்கு செயற்கை வீடு கட்டிடும் பயிற்சி பெற்றனர்.
மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவிகளை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் உலகமெங்கிலும் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தங்களாச்சேரி கிராமத்தில் சிறப்புடன் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் இளங்குமரன் வழிகாட்டுதலுடன் கனவு ஆசிரியர் விருது பெற்ற பட்டதாரி ஆசிரியர் இரா.முத்துகிருஷ்ணன் தலைமையில் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிட்டுக்குருவிகளின் இன்றைய நிலை குறித்தும்,உயிர்ச்சூழல் பாதுகாப்பில்அதன் மகத்தான பங்களிப்பு குறித்ததுமான குறும்படம் திரையிடப்பட்டது.
மேலும் பறவை ஆர்வலர் இரவீந்திரன் நடராஜனின் ஆராய்ச்சி கட்டுரையும் மாணவ,மாணவிகளுக்கு பகிரப்பட்டது.பின்னர் சிட்டுக்குருவிகளை பாதுகாத்து புகலிடம் கொடுத்திடும் வகையில் சிட்டுக்குருவிகளுக்கு செயற்கை வீடு கட்டித்தரும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.இதில் ஏராளமான மாணவ,மாணவியர் கலந்து கொண்டு ஆர்வமுடன் பயிற்சி பெற்றதுடன் தங்களது வீடுகளில் சிட்டுக்குருவி களுக்கென்று தனியாக செயற்கை வீடுகள் கட்டித் தருவோம் என்ற உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர்.அழிந்து வரும் சிட்டுக்குருவிகளுக்கு உதவிடும் வகையில் அவைகளுக்கு செயற்கை வீடுகள் கட்டித் தந்திடும் புதுமையான திட்டத்தை தங்களாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் மேற்கொண்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து