முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் பார்லி. தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெரும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

புதன்கிழமை, 20 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றியை பெரும் என்று நேற்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார்.

பிரச்சாரம் தொடக்கம்...

தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர்  ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரம்,அலங்காநல்லூர்,பாலமேடு ஆகிய இடங்களில் அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மகத்தான வெற்றி...

இந்த பிரச்சாரத்தின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அம்மாவின் நல்லாசியுடன் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணி சார்பாக புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வெற்றி வேட்பாளர்களை கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டு இன்றைக்கு தேனி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தேர்தல் பிரச்சாரம் முழுமையாக வெற்றி பெறுவதற்கும் மக்களுடைய நல் ஆதரவை பெற்று மகத்தான மாபெரும் வெற்றி பெறுவதற்கும், தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியுடன் போட்டியிடுகின்ற 40 வெற்றி வேட்பாளர்களை வெற்றி பெறுவதற்கு அருள்மிகு மஞ்சமலையான், அய்யனார் சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்து முதற்கட்ட பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம்.  அம்மாவின் அருளாசியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் 40 வெற்றி வேட்பாளர்களும் உறுதியாக மகத்தான வெற்றியை பெறுவார்கள்.

நிறைவேற்றும்...

நாடாளுமன்ற தேர்தலானாலும், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் தேர்தலையொட்டி பொதுமக்களுக்கும், தமிழக மக்களின் பாதுகாப்பு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை வழங்க தொலைநோக்கு திட்டங்களை அறிவித்து அதை நிறைவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளோம். அதன்படி அ.தி.மு.க. சார்பில் தற்போது தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கருத்துக்களும் நிறைவேற்றுவதற்கு அம்மாவின் அரசும் இதை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிறைவேற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிப்பு இல்லை...

வாரிசு அரசியல் வரக்கூடாது என்று சட்டம் இல்லை. அவரவர் தகுதிக்கு அடிப்படையில் மக்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் வருவதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை இருக்கிறது. டி.டி.வி.தினகரன் அணியால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.  எந்தவிதத்திலும் எந்த அணியால் கழகத்திற்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்படாது. இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆராலும்,அம்மாவாலும், தொண்டர்களால் உருவாக்கப்பட்டு இன்றைக்கு 28 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நல்லாட்சியை இந்த இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது.  இந்த 28 ஆண்டு காலமும் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வழங்கியதன் மூலம் எங்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது. எங்களது கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் உறுதியாக மகத்தான பெறுவது உறுதி.

அழிக்க முடியாது...

அ.தி.மு.க.வில் எந்த கோஷ்டி  பூசலும் இல்லை.ராஜகண்ணப்பனுடைய அரசியல் வழியை எண்ணி பார்த்தால் பலமுறை பல்வேறு கட்சிகளுக்கு தாவியிருக்கிறார்.  தற்போதும் அதே நிலையில்தான் அவர் நடந்திருக்கிறார். கட்சி மாறுதல் என்பது அவருக்கு கைவந்த கலை என்பது அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர்., அம்மாவால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் அழித்துவிட  முடியாது. அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து