மாரடைப்பால் உயிர் பிரிந்தது: கோவை சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரணம் - முதல்வர் - துணை முதல்வர் நேரில் அஞ்சலி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தமிழகம்
cm-deputy cm tribute to sulur admk mla death 2019 03 21

கோவை : கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திடீர் மாரடைப்பு...

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது கனகராஜிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே, அவரது உயிர் பிரிந்தது. சூலூர் சுல்தான்பேட்டையை சேர்ந்த கனகராஜிற்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வந்த கனகராஜ், மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். அதன் பிறகு கடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.

எம்.எல்.ஏ. கனகராஜ் உடல் காமநாயக்கன்பாளையம், வி.மேட்டூர் சேர்மன் தோட்டத்தில் அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன்...

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

சூலூர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். அவரது இழப்பு மனவேதனையளிக்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது பிரிவை தாங்கும் வலிமையை அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சித்தொண்டர்களுக்கு வழங்கிடவும் எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை வேண்டுகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸ் இரங்கல்...

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசும் வழக்கம் கொண்டவர். இதற்கு முன் மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவி வகித்த போது பல்வேறு நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றி மக்களிடம் பாராட்டு பெற்றவர் கனகராஜ். கனகராஜின் மறைவு சூலூர் தொகுதி மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்திரராஜன்...

தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்ட இரங்கலில் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜின் மறைவு செய்திக் கேட்டு வருத்தமடைந்ததாகவும் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை குறிப்பு...

கோவை சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வி. மேட்டூர் பகுதியை சேர்ந்த ராமசாமி கவுண்டர் பொன்னம்மாள் ஆகியோருக்கு 21.7.1951 ல் கனகராஜ் மகனாக பிறந்தார். அவருக்கு ரத்தினம் (வயது 58) என்ற மனைவியும், சண்முகசுந்தரம் என்ற மகனும், பாமா விஜயா என்ற மகளும் உள்ளனர். 1972-ல் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்த இவர், 1986-ல் சுல்தான்பேட்டை ஒன்றிய பெருந்தலைவராகவும், 1996-ல் சுல்தான்பேட்டை ஒன்றிய குழு உறுப்பினராகவும், 2001-ல் மீண்டும் ஒன்றிய பெருந்தலைவராகவும், 2006-ல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு வந்தார். சுல்தான் பேட்டை ஒன்றிய வதம்பச்சேரி ஊராட்சியின் வி.வடுகபாளையம் கிளை செயலாளராக கட்சி பணியை துவக்கிய இவர், பின்பு சுல்தான் பேட்டை ஒன்றிய துணை செயலாளராகவும், அவைத்தலைவராகவும் பதவி வகித்து உள்ளார்.

7 முறை சிறை...

2016-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு, சூலூர் சட்டமன்ற தொகுதி இவருக்கு ஒதுக்கப்பட்டு, 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு 7 முறை சிறை சென்று உள்ளார். இவருக்கு சாந்தமீனாள் என்ற மருமகளும், ஓ.வி.ஆர்.ராமச்சந்திரன் என்ற மருமகனும் உள்ளனர். மருமகன் ஓ.வி.ஆர்.ராமச்சந்திரன் செஞ்சேரிமலையடிபாளையம் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவராகவும், புதுடெல்லி இப்கோ டிரஸ்டியின் உறுப்பினராகவும் உள்ளார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து