பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி தப்பிக்க திட்டமிட்ட நிரவ் மோடி

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      இந்தியா
Nirav Modi 16 02 2018

சென்னை, பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நிரவ் மோடி லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி தப்பிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோத பரிவர்த்தனை மூலம் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றார்.

இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்தது. நிரவ் மோடியைக் கண்டுபிடிக்க சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் உதவியை சி.பி.ஐ நாடியது. கடந்த ஆண்டு இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வெளியிட்டது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி டெலிகிராப்’ நாளிதழ் 2 நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டது.

அந்த வீடியோவில் லண்டன் தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கும் நிரவ் மோடி, முழுக்க முழுக்க தனது தோற்றத்தை மாற்றியிருந்தார். நிரவ் மோடி லண்டனில் சுதந்திரமாக சுற்றித்திரிவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் நேரம் என்பதால், எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை கிளப்பின. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி முற்றியது.

இதையடுத்து நிரவ் மோடியை நாடு கடத்திக் கொண்டுவருவது தொடர்பாக இந்திய அமலாக்கத்துறை சார்பில் இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை லண்டன் போலீசார் கைதுசெய்தனர்.

நிரவ் மோடி லண்டனில் உள்ள மெட்ரோ வங்கியில் கணக்கு தொடங்க வந்தபோது வங்கி ஊழியர் போலீசாருக்கு தெரிவித்த தகவலையடுத்து போலீசார் அவரை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் நிரவ் மோடி மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த இங்கிலாந்து அரசு உத்தரவிடும். நிரவ்மோடி பிடிபட்ட போது, அவரிடம் பல நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் பெரும்பாலானவை காலாவதியாகி விட்டதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய 3 நாடுகளுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட்டுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது இந்திய பாஸ்போர்ட் ஏற்கெனவே ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது பணபலம் மூலம் இந்த பாஸ்போர்ட்டுகளை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. நிரவ் மோடி தான் கைதாவதை தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பசிபிக் பெருங்கடலில் உள்ள வனாது தீவில் செட்டிலாக திட்டமிட்டிருந்ததாகவும் இதற்காக அவர் வனாது நாட்டு குடியுரிமை கோரி விண்ணப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த வனாது தீவு ஆஸ்திரேலியாவிலிருந்து 1,750 கி.மீ தொலைவில் உள்ளது. அதுமட்டுமல்லாது சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக லண்டனில் பெரிய சட்ட ஆலோசனை நிறுவனங்களின் உதவியை அவர் நாடி இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், கைதுசெய்யப்பட்டதன் மூலம் அத்தனை திட்டங்களும் பலிக்காமல் போய்விட்டன.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து