முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் ரோட்டில் நடமாட முடியாது: பிரியாணி - செல்போன் கடைகளில் தி.மு.க.வினர் செய்யும் அராஜகம் - பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி ஆவேச பேச்சு

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

திருப்பத்தூர் : பிரியாணி உணவகம், செல்போன் கடை உட்பட எல்லாக் கடைகளிலும் அராஜகம் செய்யும் தி.மு.க.வினர், ஆட்சிக்கு வந்தால் மக்கள் ரோட்டில் நடமாட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார். மேலும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை ஒரு பொய்யான அறிக்கை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மின்னல் வேக பிரச்சாரம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தனது மின்னல் வேக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தி.மு.க.வை கடுமையாக தாக்கி பேசினார். ஏழை மக்களுக்கு உதவக் கூடிய திட்டங்களை வழக்குப் போட்டு கெடுக்கும் தி.மு.க. என்று முதல்வர் குற்றம் சாட்டினார். நேற்று தனது பிரச்சார பயணத்தை தொடர்ந்த அவர் கொளுத்தும் வெயிலில் வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடியில் அவர் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல்வரின் பேச்சை பொதுமக்கள் திரண்டு வந்து கேட்டனர்.

2-வது நாள் பிரசாரம்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டம் சேலம் இணைப்பு சாலையில் இருந்து தனது 2-வது நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து சேலம் இணைப்பு சாலை சந்திப்பு, திருப்பத்தூர், ஆசிரியர் நகர், ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளிலும், வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடியிலும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வாக்குறுதிகளை...

அப்போது அவர் பேசியதாவது, அம்மாவின் பொற்கால ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. எதை செய்ய முடியுமோ அதை மட்டும்தான் தேர்தல் அறிக்கையில் அம்மா வெளியிட்டார். குறிப்பாக, 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று அறிவித்து அதன்படி அவர் வழங்கினார். மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கி கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். தான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.

பல்வேறு நிறுவனங்கள்...

இந்த தேர்தலில் அமைந்துள்ள கூட்டணி. மெகா கூட்டணி. வெற்றி கூட்டணி. மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. வெளி மாநிலங்களில் இருந்து தொழில் தொடங்குவதற்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்த நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில் அந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. தி.மு.க. ஆட்சியிலே இது போன்ற தொழிற்சாலைகள் தொடங்கியது உண்டா? என்றால் நிச்சயமாக இல்லை.

தி.மு.க ஆட்சியில் அராஜகம்

தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் அராஜகம் இருந்தது. அந்த அராஜகங்களை இரும்புக்கரம் கொண்டு அம்மாவின் அரசு ஒடுக்கியது. ஆனால் இன்று எதிர்க்கட்சியாக இருக்கின்ற போதே பிரியாணி கடைக்கு சென்று உணவருந்தி விட்டு அதற்கு பணம் கொடுக்காமல் உரிமையாளர்களிடம் தகராறு செய்வது, அழகு நிலையங்களுக்கு சென்று அங்குள்ள பெண்களை அடித்து உதைப்பது, செல்போன் கடைக்கு சென்று அராஜகத்தில் ஈடுபடுவது, இது போன்ற எண்ணற்ற மக்கள் விரோத செயல்களில் தி.மு.க. வினர் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஆளும் கட்சியாக வந்தால் யாரும் சுதந்திரமாக ரோட்டில் நடமாடக் கூட முடியாது என்பதுதான் உண்மை. அதே போல எங்கே விலைமதிப்புள்ள நிலங்கள் இருக்கிறதோ, அதை அபகரிக்கும் முயற்சியிலும் தி.மு.க.வினர் ஈடுபடுவார்கள். இதையெல்லாம் சிந்தித்து நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

கொள்கை இல்லாதது...

தி.மு.கவும் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. அது கொள்கையில்லாத கூட்டணி. ஸ்டாலின் ஒவ்வொரு மாநிலத்திற்கு செல்லும் போதும் ஒவ்வொருவரை பிரதம வேட்பாளர் என கூறி வருகிறார். தி.மு.க கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற போது விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற பெய்யான அறிக்கையை கொடுத்து மக்களை தி.மு.க ஏமாற்றி வருகிறது. நாளுக்கு ஒரு அறிக்கை கொடுத்து கொல்லைப்புறம் வழியாக வாக்குகளை பெற தி.மு.க முயற்சிக்கிறது.

சட்டம் - ஒழுங்கு....

திருவண்ணாமலை அ.தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சராக இருந்தவர். இவர் வெற்றி பெற்றால் அத்தொகுதியில் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தி.மு.கவை சேர்ந்தவர்கள் வென்றால் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அமைச்சராவார்கள். குடும்பத்தை மட்டுமே வளர்ச்சியடைய செய்வார்கள். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்கள் நலனை கருத்தில் கொண்ட கூட்டணி. அதே போல் முதல்வராக ஜெயலலிதா (அம்மா) பொறுப்பெற்ற பிறகு கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் கிடையாது. இதை அறவே ஒழித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.

10 லட்சம் பேருக்கு...

ஒரு ஆட்சி சிறப்பாக நடைபெற சட்டம் ஒழுங்கு முக்கியம். மேலும் அண்மையில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 3 லட்சத்தி 431 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் இதுவரை 2,500 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள ஓடை, ஆறுகளில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மை திட்டத்தை நடைமுறை படுத்த 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்களை நியாமித்துள்ளோம். இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவர். அதே போல் மறைந்த சாதிக்பாஷா மனைவியின் கார் அண்மையில் தாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் அ.தி.மு.க அரசு கவனித்து வருகிறது.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து