முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடநாடு விவகாரம் குறித்த பேச்சு: ஆதாரங்களின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் மீது விசாரணை - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கொடநாடு விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் பேசிய விவகாரத்தில் அவர் மீது வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தமிழக தலைமை அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்தார்.

ஆய்வு மேற்கொள்ளும்...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

கொடநாடு விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாக அ.தி.மு.க. தரப்பில் இருந்து புகார் செய்யப்பட்டுள்ளது. அதற்கான வீடியோ ஆதாரமும் அளிக்கப்பட்டுள்ளது. அதை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விசாரணைக்காக அனுப்பி இருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற புகார்களை கவனிப்பதற்காக வீடியோ குழு ஒன்று உள்ளது. சென்னையில் எனது தலைமையில் ஒரு வீடியோ குழுவும் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒரு வீடியோ குழுவும் இயங்கி வருகிறது. அது வீடியோவில் உள்ள பேச்சுக்கள், கருத்துக்கள் அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதுபற்றி ஆய்வு மேற்கொள்ளும்.

நடவடிக்கைகள்...

பின்னர் அதன் அடிப்படையில் பரிந்துரை அறிக்கையை வீடியோ குழு அளிக்கும். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுவாக அவசரமாக நிகழ்வுகளாக இருக்கும் பட்சத்தில் உடனயாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியின் தலைமையில் ஒரு வீடியோ குழு உள்ளது. அதில் ஏதாவது மேல்நடவடிக்கை தேவைப்பட்டால் அந்தக் குழுவும் ஆய்வுகளை மேற்கொள்ளும். அதில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் மேல்முறையீட்டுக்காக தலைமைத் தேர்தல் அதிகாரியின் தலைமையிலான வீடியோ குழுவிடம் முறையிட முடியும்.

விரைவில் வருவர்...

தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவம் (கம்பெனி ஒன்றுக்கு 90 வீரர்கள் வீதம்) கோரப்பட்டுள்ளது. அதில் 10 கம்பெனி துணை ராணுவ படையினர் ஏற்கனவே வந்துவிட்டனர். அவர்கள், கண்காணிப்புக் குழு, பறக்கும்படை  ஆகியோருடன் சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள துணை ராணுவக் கம்பெனி, வாக்குப்பதிவுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்துவிடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்துக்கு 140 கம்பெனி துணை ராணுவம் வந்திருந்தது.

புகார் வந்தால்...

தேர்தல் செலவீன பார்வையாளர்கள் கேட்டுக் கொண்டால், அந்தப் பகுதிகளில் கூடுதல் எண்ணிக்கையில் கண்காணிப்புக் குழு, பறக்கும்படையை நியமித்து வருகிறோம். வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும்போது பிரமாண வாக்குமூலம் தவறான தகவல்களைக் கொண்டதாக இருக்கக் கூடாது. எல்லா பிரமாண வாக்குமூலங்களையும் ஒரே நேரத்தில் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. ஆனால் அதில் தவறுகள் இருந்தால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும். அவை கோர்ட்டில் வழக்காக தாக்கல் செய்யப்படும். அதோடு, பிரமாண வாக்குமூலங்களில் தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக வேறு யாரிடமாவது இருந்து புகார் வந்தால் அதை தேர்தல் ஆணையம் உடனே கவனிக்கும்.

அனுப்பி வைப்போம்...

சூலூர் எம்.எல்.ஏ. மரணம் பற்றிய அறிவிப்பை தமிழக சட்டசபை எங்களுக்கு அளித்துவிட்டது. அதை இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுவிட்டோம். திருப்பரங்குன்றம் தொகுதி பற்றி கோர்ட்டில் தீர்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த உத்தரவின் நகல் வந்ததும் அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்போம். ஒட்டப்பிடாரம் தொகுதிக்கான ஐகோர்ட்டின் உத்தரவை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம். அரவக்குறிச்சி தொகுதியின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இடைத்தேர்தலை நடத்த...

இந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றால் அதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோமா என்பதை மட்டும் முன்னதாக தேர்தல் ஆணையம் எங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளும். தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் இடைத் தேர்தலை நடத்த தயார். தேர்தல் நடத்தை விதிமீறல் நடவடிக்கையாக கடந்த 14 நாட்களில் ரூ.29.84 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அதில் உரிய ஆவணங்களைக் காட்டியதைத் தொடர்ந்து ரூ.4.45 கோடி உரியவர்களிடம் திருப்பித் தரப்பட்டுவிட்டது.

நெறிமுறைகளில்...

அதுபோல இதுவரை பல்வேறு இடங்களில் மொத்தம் 209.53 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்களைக் காட்டியதால் அதில் 94 கிலோ தங்கம் திருப்பித் தரப்பட்டுவிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், அதைக் கைப்பற்ற வேண்டும் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளில் ஒன்று. எனவே அந்தத் தொகையில் மாற்றங்கள் கொண்டு வர இப்போது எந்த எண்ணமும் எங்களிடம் இல்லை. இதுபற்றி வணிகர் சங்கங்கள் அளித்துள்ள மனுக்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்.

கைதிகளுக்கு ஓட்டுரிமை...

தமிழகத்தில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கான 63ஆயிரத்து 77 சர்வீஸ் ஓட்டுகள் உள்ளன. தேர்தல் பணியாற்றுவோருக்கான தபால் ஓட்டுக்கள் 3.50 லட்சம் உள்ளன. விசாரணையில் உள்ள சிறைக் கைதிகளுக்கு ஓட்டுரிமை உண்டு. அவர்களும் தபால் ஓட்டுக்கள் மூலம் வாக்களிக்கலாம். வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பே, அதாவது 16-ம் தேதியன்றே வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதை நிறுத்திவிட்டோம். ஆனாலும் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை புதிய வாக்காளர்கள் தொடர்ந்து அளிக்கலாம். ஆனால் தேர்தல் நடந்து முடிந்த பின்னர்தான் பெயர் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து