முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன் குடும்பத்தினர் கோவிலுக்கு செல்வது தெரியாதா? கடவுள் விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் - 3-வது நாள் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

வேலூர் : கடவுள் இல்லை என்று வெளித்தோற்றத்தில் கூறிக் கொள்ளும் ஸ்டாலின், தங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது அவருக்கு தெரியாதா? ஏன் இந்த இரட்டை வேடம் போடுகிறார் என்று வேலூரில் நடந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்,  அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, சோளிங்கர் சட்டசபை தொகுதி வேட்பாளர் சம்பத் ஆகியோரை ஆதரித்து, சத்துவாச்சாரி, ஆற்காடு பேருந்து நிலையம், முத்துக்கடை, சோளிங்கர், பானாவரம் கூட்டுரோடு ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது மூன்றாவது நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். நான் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து வாக்குக் கேட்டு வருகிறேன். செல்லுமிடம் எல்லாம் பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்து எங்களை வரவேற்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஆதாரிக்க வேண்டிய திட்டங்களை ஆதரிக்கும், எதிர்க்க வேண்டிய திட்டங்களை எதிர்த்து குரல் கொடுக்கும். அ.தி.மு.க.வின் கொள்கையை ஒருபோது விட்டுக் கொடுக்காது. தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை உண்மைக்கு மாறான அறிக்கை. அவர்கள் அறிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்  ஊழல் என்று சொல்லி வருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி தி.மு.க. என்பதை அவர் மறந்து விட்டு பேசுகிறார். அவர் தேடித் தேடி பார்க்கிறார். எங்கேயும் எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. அ.தி.மு.க.வை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. தி.மு.க. எவ்வளவோ போராட்டங்களை நடத்தினாலும் அனைத்து போராட்டங்களிலும் வெற்றி காணும் வகையில் போராடுபவர்களை அழைத்து அவர்களிடத்தில் சமாதானமாக பேசி, போராட்ங்களை முடிவுக்கு கொண்டு வந்த அரசு அம்மாவின் அரசு. தி.மு.க. தூண்டுதலின் பேரில் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், அத்தனை போராட்டங்களையும் முறியடிக்கின்ற சக்தியும் ஆற்றலும் இந்த அரசுக்கு உண்டு. 

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை கண்டுபிடித்தது இந்த அரசு தான். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுத்து அவர்களை வெளியில் கொண்டு வருபவர்கள் தி.மு.க.வைச் சார்ந்தவர்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சந்தேகங்களை தீர்த்து வைப்பது அரசினுடைய கடமை. எனவே, யார் தவறு செய்திருந்தாலும், தப்பிக்க முடியாது. உரிய நடவடிக்கை அரசு எடுக்கும். சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் சார்பில் கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறி நாளிதழ்களில் நினைவஞ்சலி விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், சாதிக் பாட்சா  மனைவி காரிலே சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்தும் உரிய விசாரனை மேற்கொள்ளப்படும்.

தி.மு.க. கூட்டணியில் தற்போது சேர்ந்துள்ள வைகோ, என் உயிர் உள்ளவரை, ஸ்டாலினை முதலமைச்சராக வர விடமாட்டேன் என்றும், தி.மு.க. குடும்ப ஆதிக்க கட்சி என்றும் கூறினார். ஆனால் இன்று அவரை, தங்கள் கூட்டணியில் சேர்த்தது எப்படி, இதையெல்லாம் நாட்டு மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று வெளித்தோற்றத்தில் கூறிக் கொள்ளும் ஸ்டாலின், தங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது அவருக்கு தெரியாதா? ஏன் இந்த இரட்டை வேடம் போடுகிறார்.  எறும்பு தேய்ந்து கட்டெறும்பான கதையாக கட்சி துவங்கி மக்களின் ஆதாரவைப் பெறாமல், சிறிது சிறிதாக மக்கள் செல்வாக்கை இழந்துள்ள கட்சிகளோடு ஸ்டாலின் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறார். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் ஜாதி கலவரம் இல்லை, மதக் கலவரம் இல்லை, மிகவும் அமைதியான முறையில் மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த அரசு அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து, அவர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. இதற்கான விருதும் இந்திய துணை ஜனாதிபதியால் வழங்கப்பட்டு, அதை நான் பெற்றுக் கொண்டேன். சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பாக செயல்படுவதற்கு இந்தியாவில் இருக்கின்ற காவல் நிலையங்களில் கோவை, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடத்தையும், அண்ணா நகர் காவல் நிலையம் ஐந்தாவது இடத்தையும், பெரியகுளம் காவல் நிலையம் எட்டாவது இடத்தையும் பெற்றிருப்பதே சாட்சி ஆகும்.

ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சாரத்திலே என்னை கடவுள் என்று கூறியிருக்கிறார். நான் ஒரு சாதாரண விவசாயி. அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல ஸ்டாலினுக்கு வேண்டுமானால் அப்படி தெரியும். நான் என்றுமே என்னை ஒரு முதல்வராக நினைத்தது இல்லை. நான் தொண்டனாக இருக்கிறேன். ஆனால் ஸ்டாலின்  தலைவனாக இருந்து பார்க்கிறார். மக்கள் கொடுக்கின்ற அன்பு தான், எனக்கு பரிசு. நான் 1974-ம் ஆண்டு கிளைக் கழகச் செயலாளாராக என்னுடைய அரசியல் வாழ்க்கையை துவக்கி இன்று படிப்படியாக பல்வேறு பொறுப்புகளைப் பெற்று  உயர்ந்து முதல்வராக இருக்கின்றேன். ஆனால், ஸ்டாலின் அப்படி அல்ல, அவரது தந்தை தி.மு.க. தலைவராக இருந்தார். அவர் மறைவுக்குப் பின்பு அவரே தலைவராகி விட்டார். அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும் என்பதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன். இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மாவின் அரசு என்றும் அரணாகவும், பாதுகாப்பாகவும் இருந்து வருகிறது. இப்தார் நோன்பு கஞ்சிக்காக 4900 மெட்ரிக் டன் அரிசி வழங்கிய அரசு அம்மா அரசு. அதே போன்று நாகூர் தர்கா சந்தன கூடு விழாவிற்கு சந்தனம் வழங்கிய அரசும் அம்மாவின் அரசு, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய பெருமக்களுக்கு மத்திய அரசு மானியத்தை நிறுத்திய போதும், இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ரூ.6 கோடி மாநில அரசின் நிதியுதவி வழங்கிய அரசு அம்மாவின் அரசாகும்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தனது நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு 100 பேர் என 600 ஏழை, எளிய மாணவர்களுக்கு தனது கல்வி நிறுவனத்தின் மூலம் இலவசமாக கல்வி வழங்குவதாகவும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இது போன்ற மக்கள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு இரட்டை இலை சின்னத்திலும், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.கே.மூர்த்திக்கு மாம்பழம் சின்னத்திலும், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் சம்பத்திற்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து