முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே தண்ணீர் தேடி அலையும் மான்கள் கூட்டம்: வசதிகள் செய்து தந்திட வனத்துறையினருக்கு கோரிக்கை:

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் அருகே வறட்சியின் காரணமாக தண்ணீர் தேடி ஆபத்தான முறையில் அலைந்திடும் மான்களுக்கு போதிய தண்ணீர் வசதியினை வனத்துறையினர் செய்து தந்திட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் தாலுகா சிவரக்கோட்டை மற்றும் நேசநேரி கண்மாய் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் கூட்டமாக தங்கியுள்ளது. தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் சிவரக்கோட்டை மற்றும் நேசநேரி கண்மாய் பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மான்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதை தொடர்ந்து இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடும் மான்கள் கூட்டம் அருகிலுள்ள ராயபாளையம்,கரிசல்காளம்பட்டி,சுவாமிமல்லம்பட்டி,செங்கப்படை, ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள தோட்டங்களை நோக்கி படையெடுத்து வந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இந்நிலையில் அருகிலுள்ள கிராமங்களிலும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மான்களின் கூட்டம் தற்போது ஆலம்பட்டி பகுதியில் கல்குவாரி கிடங்குகளில் தேங்கியுள்ள தண்ணீரின் மீது கவனம் செலுத்தி வருகிறது.மிகவும் ஆழமாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் காணப்படும் இந்த ஆலம்பட்டி கல்குவாரி கிடங்குகளில் தண்ணீர் குடித்திட மான்கள் தங்களது உயிரை பணயம் வைக்க வேண்டியுள்ளது.கரணம் தப்பினால் மரணம் என்ற சூழ்நிலையில் அமைந்துள்ள கல்குவாரி கிடங்குகளில் மான்கள் தற்போது தண்ணீர் குடித்துச் செல்கின்றன.அதே போல் தண்ணீரைத் தேடி வரும்போது நான்கு வழிச்சாலையை கடந்திட முயற்சிக்கும் மான்கள் வாகனங்களில் அடிபட்டும், கிராமங்களை கடந்து சென்றிடும் சமயத்தில் தெருநாய்கள் கடித்தும் உயிரிழக்கும் நிலை காணப் படுகிறது.எனவே வறட்சியான கோடை காலங்களில்  சிவரக்கோட்டை மற்றும் நேசநேரி கண்மாய் பகுதிகளில் தேவையான அளவில் தண்ணீர் தொட்டிகளை அமைத்து மான்களின் தாகத்தை வனத்துறையினர் தீர்த்திட வேண்டும் என்று வனத்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து