கடைசிவரை அழுத்தம் தந்தார்கள்: ராஜஸ்தான் அணிக்கு டோனி பாராட்டு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      விளையாட்டு
Dhonis 2019 04 12

Source: provided

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டி சிறந்த ஒன்றாக இருந்தது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறினார்.

த்ரில் வெற்றி...

ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது. சென்னை அணியின் ஜடேஜா சாஹர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அதிக ரன்களை எடுக்காமல் தடுத்தனர்.  பின்னர் சென்னை அணி விளையாடி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. டோனி 43 பந்துகளில் 58 ரன்களையும், ராயுடு 47 பந்துகளில் 57 ரன்களையும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது டோனிக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 100 ஐபிஎல் போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை டோனி பெற்றார்.

சிறந்த போட்டியாக...

பின்னர் அவர் கூறும்போது, ‘’அவர்கள் கடைசிவரை எங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். இதுபோன்ற கடைசி நேர பரபரப்புக்கு இடையே, போட்டியை வென்றால், அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். இது சிறந்த போட்டியாக இருந்தது. இதற்கு ராஜஸ்தான் அணியை பாராட்ட வேண்டும். அவர்கள் எடுத்தது சரியான ஸ்கோர்தான். இன்னும் சில ரன்களை எடுத்திருக்க வேண்டும். கடைசிவரை எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இந்த மைதானம் பெரியது. கடைசி கட்டத்தில் விக்கெட் மெதுவாகி விட்டது. இதனால் பந்தை அடிப்பது கடினமாக இருந்தது. இங்கு எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. எனது சிறந்த இன்னிங்ஸ் இங்கு நடந்திருக்கிறது. இதை மறக்க முடியாது’’ என்றார்.

அழுத்தம் இல்லை...

அம்பத்தி ராயுடு கூறும்போது, ’’அணியை வெற்றிக்கு அழைத்துக்கு வந்ததில் மகிழ்ச்சி. நானும் டோனியும் அனுபவம் கொண்ட வீரர்கள். எங்களுக்கு அழுத்தம் ஏதும் இல்லை. கடைசிக்கட்டத்தில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பினோம். பிட்ச் மெதுவாக மாறிவிட்டது. அதனால் பந்தை அடிப்பதற்கு கடினமாக இருந்தது. கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பந்துவீசினார்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து