முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்து கணிப்பு என்ற பெயரில் மக்களை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் சதி: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, கருத்துக் கணிப்பு என்னும் பெயரில் தங்களது குடும்ப ஊடகங்களையும், அ.தி.மு.கவினரையும், பொதுமக்களையும் திசை திருப்பும் நோக்கோடும், பெரும் சதியில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் மீது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கண்துஞ்சாமல் விழிப்போடு இருந்து பணியாற்ற வேண்டும்  என்று தொண்டர்களுக்கு எழுதிய மடலில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடல் வருமாறு:-

குறிக்கோளோடு...

எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க.தான் தமிழகத்தை ஆளும் என சட்டமன்றப் பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒலித்திட்ட கடைசி சூளுரையை இதயத்தில் நிறுத்தி, நம் கருணைத் தாயின் அந்த நம்பிக்கையில் கடுகளவும் குறை நிகழ்ந்து விடக் கூடாது எனும் குறிக்கோளோடு 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கூட்டணிக்கே வெற்றி என்னும் லட்சியத்திற்காகவும், இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அனைத்தும் இலைத் தேர்தலாகும் என்னும் உறுதியோடும் அயராது உழைத்து வரும் அ.தி.மு.க.வின் அன்பு உடன்பிறப்புகளே, கனவுமிக்க இந்த இயக்கத்தை மடியிட்டு வளர்த்து வரும் அன்பிற்குரிய தாய்மார்களே, ஆற்றல் மிக்க செயல் மறவர்களே, கழகத்தின் பல்வேறு நிலைகளில் கடமையாற்றிவரும் கழக அடலேறுகளே!

திசை திருப்பும்...

தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கிற தலைப் பிரசவம் போல, முப்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக நம்மையும், நம் கழகத்தையும் வழிநடத்திய நம் அம்மா இல்லாத நிலையில், நாம் சந்திக்கும் முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இது என்றாலும், நாம் அமைத்திருக்கும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மெகா கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் வென்று காட்டும் என்பது நிதர்சனமான உண்மை. இதனை உணர்ந்து கொண்ட எதிர்க்கட்சிகள், கருத்துக் கணிப்பு என்னும் பெயரில் தங்களது குடும்ப ஊடகங்களையும், கூலிக்கு மாறடிக்கும் சிலரையும் வைத்துக் கொண்டு, கழகக் கூட்டணிக்கு வாக்களிக்க திடமாக எண்ணி இருக்கும் வாக்காளர்களையும், பொதுமக்களையும் திசை திருப்பும் நோக்கோடும், எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல் போராடி வரும் நம் கழகத் தொண்டர்களின் எழுச்சியைத் தடுத்து, அவர்களிடையே ஒரு மனச் சோர்வை உருவாக்கிடும் யுக்தியோடும் பெரும் சதியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சரித்திரம் படைப்பது...

அவர்கள் அடித்துக் குவித்து வைத்திருக்கும் அலைக்கற்றை பணங்களை இறக்கி, விதவிதமான விளம்பரங்களால் வாய்மையை வென்று விடலாம் என கனா காண்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சுகிற பழக்கமோ, கவன சிதைவுக்கு ஆளாகிற வழக்கமோ நம் கழகத் தொண்டர்களுக்கு ஒரு போதும் இல்லை. வெல்லப் பாயும் குதிரை, கொல்லையும் நோக்காது, புல்லையும் பார்க்காது என்பது போல, கொண்ட குறிக்கோளை வென்றெடுப்பதில் இம்மியளவும் விலகாமல் சரித்திரம் படைப்பது தான் நம் கழகத்தின் வரலாறு.
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் நமது பாதை சரியாக இருக்கிறது என்பது தானே அர்த்தம். இன்று மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கக் கூடிய நாமும், பாரதிய ஜனதா கட்சியும் செய்திருக்கும் மகத்தான சாதனைகளை, மக்கள் நலப் பணிகளை மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம். எஞ்சியிருக்கும் பணிகளை விரைவில் செய்து முடித்திடுவோம் என்கிற உளமார்ந்த உறுதியையும் அவர்களிடம் தருகிறோம்.

இன அழிப்பு...

இதனால், அலை அலையாய் அணிவகுக்கும் மக்கள் - இலைக்கும், பூவுக்கும், கனிக்குமே எங்கள் ஓட்டு என்று முரசடித்துச் சொல்கிறார்கள். ஆனால், ஐந்து முறை ஆட்சி செய்த தி.மு.க.-வும் சரி, ஐம்பதாண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரசும் சரி, தாங்கள் செய்த சாதனைகள் என்று சொல்வதற்கு ஏதும் இல்லதவர்களாய் உள்ளனர். கச்சத் தீவை தாரை வார்த்ததும், காவேரி துரோகமும், இலங்கையில் அவர்கள் கரம் கோர்த்து நடத்திய இன அழிப்புப் படுகொலைகளும், அவர்கள் கண் முன்னே வந்து நிற்பதால், வெட்கப்பட்டுக் கொண்டு எடுத்துச் சொல்ல சாதனை எதுவும் இல்லாத காரணத்தால், எங்கள் மீதும் அ.தி.மு.க. மீதும், பிரதமர் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தொடுக்கிறார்கள்.

கண் துஞ்சாமல்...

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையை அனைவரும் பாராட்டுகின்றனர். இப்படி, மக்களை ஈர்க்கும் காந்தங்கள் எல்லாம் நம்முடன் இருப்பதோடு, மக்கள் திலகம், மகராசி அம்மா ஆகியோரது மனமார்ந்த ஆசியும், வாழ்த்தும், மக்களின் ஏகோபித்த ஆதரவும் நமக்குள்ளது. அதனால், நம் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. எனவே, வாக்களிக்கும் வைபவத் திருநாளான வரும் 18-ம் தேதி வரை கண்மணிகள் அனைவரும் மிகுந்த விழிப்போடு கண் துஞ்சாமல் களப்பணியாற்றிட வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மடலில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து