விளக்கம் பெறவே டோனி சென்றார் - ஸ்டீபன் பிளமிங்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      விளையாட்டு
Stephen Blaming 2019 04 12

Source: provided

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சென்னை அணி நேற்று முன்தினம் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியின் கடைசி ஓவரில் நடுவர்கள் நோ-பால் கொடுத்துவிட்டு பின்னர் இல்லை என்று கூறியதால், டோனி ஆடுகளத்திற்குள் சென்று நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

டோனி நடுவர்களிடம் விளக்கம் பெறுவதற்காகவே சென்றார் என்றும், இந்த விவகாரத்தை நடுவர்கள் கையாண்ட விதம் அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளார்.
____________

டோனிக்கு அபராதம்

ஜெய்பூரில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 151 ரன்கள் எடுத்தது. வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடிய போது கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து சென்னை அணியின் சட்னரின் இடுப்புக்கு மேலே பந்து செல்லும்படி பவுளிங் செய்தார். இதை ஒரு நடுவர் நோ-பால் என்று அறிவித்தார். ஆனால் இதனை மற்றொரு நடுவர் மறுத்ததால் பொறுமையை இழந்து ஆடுகளத்திற்குள் சென்று நடுவர்களிடம் டோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஐபிஎல் விதிமுறைகளின் படி விக்கெட்டை இழந்த ஒரு வீரர் போட்டி நடக்கும் போது மீண்டும் ஆடுகளத்திற்குள் செல்வது தவறாகும். எனவே விதிமுறையை மீறிய டோனிக்கு அவரின் ஒரு போட்டிக்கான சம்பளத்தில் பாதியை அபராதமாக விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
____________

சென்னை வீரர் ஜடேஜா புதிய சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில், 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் எனும் பெருமையை, சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசிய அவர், அந்த அணி வீரர்களான ராகுல் திரிபாதி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவற்றில் ஸ்மித்தின் விக்கெட்டை அவர் வீழ்த்தியபோது இந்த பெருமையை அவர் பெற்றார்.

ஐபிஎல்லில் இதுவரை 161 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, எதிரணிக்கு குறைவான ரன்களை விட்டுக்கொடுக்கும் பந்துவீச்சாளர்களுள் ஒருவராகவும் இருந்துவருகிறார்.
____________

லண்டன் செல்லும் சென்னை சிறுவர்கள்

கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ள நிலையில், தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை ஒன்று லண்டனில் நடைபெறவுள்ளது. தெருக்களில் சிறுவர்கள் தங்கள் வசதிக்கேற்றதுபோல விதிகளை மாற்றி அமைத்துக்கொண்டு விளையாடுவது தான் தெருக் கிரிக்கெட். அந்த வகையில் லண்டனில் நடத்தப்படும் தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு சென்னையில் இருந்து 4 சிறுவர்கள் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் வடசென்னையில் உள்ள கருணாலயா பொது சேவை மையத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் மும்பையை சேர்ந்து 4 சிறுவர்கள் சேர்ந்து 8 பேர் கொண்ட ஒரே அணியாக லண்டன் செல்லவுள்ளனர். இந்த தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ், நேபால் உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த 10 அணிகள் விளையாடவுள்ளன. இந்தியாவில் வட இந்தியா, தென் இந்தியா என இரு அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இந்த நான்கு சிறுவர்கள் தாய் அல்லது தந்தைய அல்லது இரண்டு பேரையும் இழந்து ஆதரவற்ற நிலையில், ஏழ்மையுடன் கருணாலயா மையத்தில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 ____________

டோனியை தாக்கிய மோசமான பவுன்சர்!

ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகவும் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, டோனி 58 ரன்களும், ராயுடு 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் வெற்றிக்கு போராடி டோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தப் போட்டியின் 17-வது ஓவரில் ராஜஸ்தான் அணியின் ஆர்செர் வீசிய மோசமான பவுன்சர் பந்து டோனியின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இருப்பினும், அதை பொருட்படுத்தாமல் டோனி ரன் எடுக்க ஓடினார். அதேபோல், 19-வது ஓவரில் டோனி சுவாசிக்க சிரமப்பட்டார். உடனே சென்னை அணியின் உடற்பயிற்சி நிபுணர் மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டார். டோனி, மைதானத்தை விட்டு வெளியேறிவிடுவார் என சிலர் நினைக்க, சிறிது நேர சிகிச்சைக்குப்பிறகு, மீண்டும் பேட்டிங் செய்து ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தார். சுவாசிக்க முடியாமல் மண்டியிட்ட டோனியின் புகைப்படத்தை சி.எஸ்.கே தனது ட்விட்டரில், “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.
____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து