வரும் 16, 17-ந்தேதிகளில் கேரளாவில் ராகுல் பிரசாரம் - பாதுகாப்பை அதிகரிக்க முடிவு

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2019      அரசியல்
Rahul 2019 04 10

திருவனந்தபுரம், கேரளாவில் 16, 17-ந்தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுலுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க அம்மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர்.  

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன் பிறகு ரோடு ஷோ நடத்திய ராகுல் மீண்டும் வயநாடுக்கு வந்து பிரசாரம் செய்வேன் என்று கூறி இருந்தார்.

அதன்படி வருகிற 16, 17-ந்தேதிகளில் கேரளாவில் 2 நாட்கள் ராகுல் பிரசாரம் செய்ய உள்ளார். 16-ந்தேதி காலை டெல்லியில் இருந்து புறப்படும் ராகுல் முதலில் காலை 10 மணிக்கு பத்மநாபபுரத்தில் பிரசாரம் செய்கிறார்.
பிறகு பத்தனம்திட்டா செல்கிறார். அங்கு 11.30 மணிக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

மாலை 4 மணிக்கு ஆலப்புழை நகரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு பிரசாரம் செய்து பிறகு திருவனந்தபுரம் செல்கிறார். மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

திருவனந்தபுரம் பொதுக்கூட்டம் முடிந்ததும் கண்ணூருக்கு புறப்பட்டு செல்கிறார். அன்று இரவு அங்கு தங்குகிறார். மறுநாள் காலை வயநாடு தொகுதிக்கு புறப்பட்டு செல்கிறார்.

17-ந்தேதி (புதன்கிழமை) முழுவதும் ராகுல் தனது வயநாடு தொகுதியில் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். அன்று காலை முதல் இரவு வரை வயநாடு தொகுதியில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளார். வயநாடு பாராளுமன்ற தொகுதியில் 7 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன. இதில் எந்தெந்த தொகுதிகளுக்கு ராகுல் செல்வார் என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

ஒரே நாளில் 7 சட்டசபை தொகுதிகளுக்கும் செல்ல இயலாது என்பதால் மீண்டும் ஒருமுறை வயநாடு தொகுதிக்கு செல்ல ராகுல் முடிவு செய்துள்ளார். இதற்கிடையே ராகுலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பேகேரா உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் அமேதி தொகுதியில் மனு தாக்கல் செய்ய சென்றபோது ராகுல் தலை மீது 7 தடவை லேசர் கதிர்வீச்சு குறியீடு காணப்பட்டது.

பச்சை நிறத்தில் காணப்பட்ட அந்த லேசர் மூலம் நீண்ட தொலைவில் இருந்து ராகுலை சுட்டுக்கொல்ல முயற்சிகள் நடந்து இருக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் மத்திய உள் துறைக்கு கடிதம் அனுப்பி புகார் தெரிவித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு ராகுலுக்கு 16, 17-ந்தேதிகளில் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க கேரள மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ராகுல்காந்தி பேசும் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, பத்மநாபபுரம், ஆழப்புழை, வயநாடு பகுதிகளில் பொதுக்கூட்டம் நடக்கும் இடங்கள் அருகே உள்ள பெரிய கட்டிடங்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். ராகுல் பேசும் இடம் அருகே இருக்கும் கட்டிடங்கள் அனைத்தையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.இதுதவிர ராகுல் அருகில் யாரும் நெருங்காதபடி பல அடுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் கேரள மாநில போலீசார் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து