ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 1100 பேர் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      இந்தியா
Jet Airways 21-09-2018

புது டெல்லி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சம்பளம் வழங்காததால் சுமார் 1100 விமானிகள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் அந்நிறுவனம் கடன் வைத்துள்ளது. அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. 16 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து விமானங்களை ஓட்டாமல் அந்நிறுவனத்தின் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய விமானிகள் சங்கம் முன்னர் எச்சரித்திருந்தது.

இதை நினைவூட்டும் வகையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்குள் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று காலை 10 மணி முதல் ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் தொடங்குகின்றனர். சுமார் 1100 விமானிகள் இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து